டுபாயில் நிதிசார் குற்றமொன்றைப் புரிந்துள்ள நிலையில் இலங்கையைச் சேர்ந்த குடும்பத் தலைவரொருவரும் அவரது மனைவி பிள்ளைகளும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து தப்பியோடி ஓமானில் ஒளிந்திருந்த நிலையில் றோயல் ஓமானியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர், இம்மாதம் முதல் வாரத்தில் டுபாய்க்கு நாடு கடத்தப்பட்டதாக 'டைம்ஸ் ஒவ் ஓமான்' செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஓமானியத் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரக தொழில் ஆலோசகர் எம்.எம்.தேசப்பிரிய தெரிவிக்கையில்,
முழுக் குடும்பம் ஒன்று சம்பந்தப்பட்ட விவகாரத்தை தாங்கள் றோயல் ஓமானிய பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் அவர்கள் நாடு கடத்தப்பட்டமை இதுவே முதற்தடவை எனவும், 'ஆர்.எவ்." எனும் குறியீட்டுப் பெயருடைய 40 வயதான இலங்கையரின் வியாபார நடவடிக்கைகள் முடங்கியும், அவரது காசோலைகள் வங்கிகளிடமிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இரண்டு வயதிற்கும் பத்து வயதிற்கும் இடைப்பட்ட தங்கள் நான்கு பிள்ளைகளுடன் அவரும் அவரது மனைவியும் டுபாயை விட்டுத் தப்பியோடி ஓமான் தலைநகர் மஸ்கட்டில் தஞ்சமடைந்தனரெனவும் குறிப்பிட்டார். அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில் புகலிடம் கோரிய அவர்கள் மஸ்கட்டில் உள்ள சிலரால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், தாயகம் திரும்புவதற்கு தங்களுக்கு அவசர கடவுச்சீட்டொன்று தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், 'ஆர்.எப்' தனது குடும்பத்தாருடன் கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றதும் புதிய வியாபாரமொன்றை ஆரம்பித்ததுடன் 80,000 திராம்களை கடனாகக் கூட பெற்றுள்ளார். ஆயினும், அவரது வியாபாரம் நஷ்டத்தில் இயங்கியதுடன், காசோலைகளும் திரும்பத் தொடங்கின. மாற்று வழியின்றி டுபாயிலிருந்தோ அல்லது ஷார்ஜாவிலிருந்தோ இலங்கைக்கு விமானத்தில் திரும்பிச் செல்வது இயலாத காரியம் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்ததால் கடந்த மாதம் முதல் வாரத்தில் அவர் மஸ்கட்டுக்குத் தப்பியோடத் தீர்மானித்தார்.
மஸ்கெட் சென்றடைந்த அவர் அங்குள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளை அணுகி தமக்கு தாயகம் திரும்பிச் செல்வதற்கென அவசர கடவுச்சீட்டொன்றை வழங்குமாறு கோரியிருந்தார்.
'ஆர்.எப்."க்கு எதிராக இன்டர்போல் பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்ததையும், டுபாயில் அவர் வியாபாரம் செய்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்து, அவரைக் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியிருந்ததையும் இலங்கைத் தூதரகம் அறிந்து வைத்திருந்தது. ஆயினும், ஓமானில் தனது பணம் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாகவே அவர் ஆரம்ப விசாரணையின் போது தெரிவித்திருந்ததாகவும் தேசப்பிரிய மேலும் கூறினார்.
ஆயினும், தொடர் விசாரணையின்போது டுபாய் எல்லையை சட்டவிரோதமாகக் கடந்து சென்றதை 'ஆர்.எவ்.' ஒப்புக் கொண்டதாகவும், அதன் பின்னரே தாங்கள் அவரை றோயல் ஓமானிய பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் ஓமானிலிருந்து அவர் டுபாய்க்கு இம்மாத முதல் வாரத்தில் நாடு கடத்தப்பட்டதாகவும் தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

Post a Comment