GuidePedia

உக்ரைனில் கலவரம் நீடித்து வருவதையடுத்து அங்குள்ள தனது நாட்டு தூதரகம் தாற்காலிகமாக மூடப்படுவதாக கனடா வியாழக்கிழமை அறிவித்தது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு எதிர்ப்பாளர்கள் புகலிடம் தேடி கனடா தூதரகத்தில் நுழைய முயன்ற அடுத்த நாளில் இந்த முடிவை அந்த நாடு எடுத்துள்ளது.
இது தொடர்பாக கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஆடம் ஹோட்ஜ் கூறுகையில், ""கனடா தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக எங்களது தூதரகம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும். அச்சுறுத்தல், சிறைப்பிடிப்பு அல்லது ஏனைய தொந்தரவுகளில் இருந்து அரசு எதிர்ப்பாளர்கள் விடுபட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
உக்ரைனில் சுமார் ஒன்றேகால் லட்சம் கனடா நாட்டினர் வசிப்பதாக கூறப்படுகிறது.
பான் கீ மூன் கண்டனம்: இதனிடையே, ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் மார்டின் நெசர்கி விடுத்துள்ள அறிக்கையில், "உக்ரைனில் தொடரும் நிகழ்வுகள் கண்டனத்துக்கு உரியவை. வன்முறைச் சம்பவங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சர்வதேச மனித உரிமை சட்டத்துக்கு உட்பட்டு அதிக படைப் பிரயோகத்தை அரசு தவிர்க்க வேண்டுமென்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷியாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெல்கோவ் கூறுகையில், ""இந்த விவகாரத்தில் அதிபர் புதினின் கருத்துப்படி, தற்போது உக்ரைனில் நிகழ்ந்து வரும் விரும்பத்தகாத அனைத்து சம்பவங்களுக்கும் கிளர்ச்சியாளர்களே பொறுப்பு.
ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ரஷியா கவனித்துக் கொண்டிருக்கிறது'' என்றார்.
மேலும், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃப்ராங் வால்டர் ஸ்டீமினீயரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் உக்ரைனில் எதிர்க்கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட ஊக்குவிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை குறித்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் முக்கிய 3 எம்.பி.க்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் விக்டர் யானுகோவிச் முன்வந்துள்ளார்.
இது தொடர்பாக போராட்டக்குழுவின் முக்கிய தலைவரான விதாலி கிளிட்ஸ்ச் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ள அதிபரின் அறிக்கையில், "நாட்டில் ஸ்திரத்தன்மை, அமைதியை நிலைநாட்டும் நோக்கில், சமாதான பேச்சுவார்த்தை நடவடிக்கையை மேற்கோள்ள அரசு விரும்புகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Top