போர்மியூலா வன் காரோட்டத்தில் முன்னாள் உலக சம்பியனான மைக்கல் ஷூமாக்கரை கோமா நிலையிலிருந்து விழித்தெழச் செய்வதற்காக, அவரின் மனைவி தினமும் பல மணித்தியாலங்கள் அவருக்கு அருகிலிருந்து உரையாடி வருகிறார்.
45 வயதான மைக்கல் ஷூமாக்கர் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளானதிலிருந்து பிரான்ஸிலுள்ள கிறேனோபிள் வைத்தியசாலையில் செயற்கை கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை கோமாவிலிருந்து விழித்தெழச் செய்வதற்கான நடவடிக்கைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, அவரை கோமா நிலையில் வைத்திருப்பதற்கு செலுத்தப்பட்ட மருந்தின் அளவை படிப்படியாக மருத்துவர்கள் குறைத்து வருகின்றனர். கடந்த மாத இறுதியில் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு நீண்டகால செயற்பாடாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முயற்சி வெற்றியடைவதற்கு பல வாரங்கள் தேவைப்படலாம் என ஷூமாக்கரின் மகள் ஜினா மேரி (16), மகன் மைக் (14) உட்பட அவரின் குடும்பத்தினருக்கு மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைக்கல் ஷுமாக்கரின் மனைவி கொரினா ஷூமாக்கரும் ஷூமாக்கரின் படுக்கைக்கு அருகில் பல மணித்தியாலங்கள் இருந்து அவருடன் பேசி வருவகிறார். மைக்கல் ஷூமாக்கரை மோமாவிலிருந்து விழித்தெழச்செய்வதை இம்முயற்சி துரிதப்படுத்தும் என 44 வயதான கொரினா நம்புகிறார். எனினும் இதுவரை மைக்கல் ஷூமாக்கரிடமிருந்து பிரதிபலிப்பு எதையும் அவர் பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஷூமாக்கர் விபத்துக்குள்ளானதிலிருந்து அவரின் மூளையில் இரு தடவைகள் மருத்துவர்கள் சத்திரசிகிச்சை செய்துள்ளனர். மூளையில் வீக்கத்தை குறைப்பதற்காக செயற்கை கோமா நிலையில் ஷூமாக்கர் வைக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக நோயாளிகள் இத்தகைய செயற்கை கோமாநிலையில் இரு வாரங்களுக்கே வைக்கப்பட்டிருப்பர். எனினும், ஷூமாக்கர் 7 வாரங்களுக்கு மேலாக கோமா நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிலவேளை அவர் கோமாவிலிருந்து விழித்தெழ முடியாமல் போகலாம் என ஜேர்மனியைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் ஒருவர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கோமாவிலிருந்து விழித்தெழச் செய்வதற்கான ஆரம்பக்கட்டச் சோதனைகளுக்கு ஷூமாக்கர் பிரதிலிப்பை காட்டியதாகவும் இதன் ஒரு பகுதியாக கண்சிமிட்டியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை மைக்கல் ஷூமாக்கர் மரணமடைந்துவிட்டதாக சில தினங்களுக்குமுன் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியிருந்தன. ஆனால், இத்தகவல்களை கிறேனோபிள் வைத்தியசாலை மருத்துவர்கள் மறுத்துள்ளனர். மைக்கல் ஷூமாக்கர் உயிருடன் உள்ளார், அவரை கோமாவிலிருந்து விழித்தெழச் செய்வதற்கான முயற்சிகள் தொடர்கின்றன எனவும் கமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment