GuidePedia

0
வன்னி பெருநிலப்பரப்பில் மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு மூன்று வருடங்கள் பூரணமாகி விட்டாலும், உட்கட்டமைப்பு வசதிகள் என்று சொல்லப்படுகின்ற மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு, பொது போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம், கல்வி, சத்துணவு, பாதுகாப்பான கழிப்பறைகள், சுவாத்தியமான வசிப்பிடங்கள், வேலை வாய்ப்புகள் இன்னும் பூரணமாகவில்லை.
சிறுக சிறுகச்சேமித்து மக்கள் தம் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பினாலும் கூட, திடீர் திடீரென எழும் இயற்கை சீற்றங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை சரமாரியாக சீர்குலைத்து விடுகின்றன. “சாண் ஏற முழம் சறுக்கிய கதையாக” அவர்கள் எங்கிருந்து தொடங்கினார்களோ, அந்த இடத்துக்கே திரும்பி வந்து, மறுபடியும் அங்கிருந்தே அவர்கள் தம் வாழ்க்கைத்தர மேம்பாடுக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.
வாழ்க்கைத்துணையிழந்த இளம் விதவைப்பெண்கள், அதிலும் பெண்களை தலைமைத்துவமாக, பெண்களை மட்டும் அங்கத்தவர்களாக கொண்ட குடும்பங்களின் நிலைமையோ அந்தோ பரிதாபம் தான்!
எம் தமிழ் பெண்களின் இந்த அவலத்தையும், வறுமையையும், கையறு நிலையையும், தமக்கு சாதமாக பயன்படுத்தி, தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஒரு சில காமுகர்கள் நுனிப்புல் மேயும் வேலையை ஆரம்பித்துள்ளனர்.
சில இடங்களில் வறுமையிடம் மானம் தோல்வியடைந்து விடுவதால், வறுமையிடம் மானம் சரணடைந்து விடுவதால் காமுகர்கள் மொத்தத்தையும் பிரித்து மேய்ந்து விடுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்திய அரசின் நிதியுதவியிலான வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோராக “UN HABITAT” எனும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனம் செயல்படுகின்றது.
“UN HABITAT”புதுக்குடியிருப்பு வேணாவில் கிராம அலுவலர் பிரிவில் கோம்பாவில் பகுதியில் மட்டும் தன்னால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 50 வீடுகளை கண்காணிப்பதற்காக “வீட்டுத்திட்ட கண்காணிப்பாளராக” சுரேஸ் என்பவரை நியமித்துள்ளது.
“காசுக்கான வேலை” எனும் திட்டமுறையில் (ஐந்து கட்டங்களாக) வீட்டுத்திட்ட வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதல் கட்டமாக வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு, மக்கள் வீட்டுக்கான அத்திபார வேலைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
பணிகள் மதிப்பிடப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு, கட்டு வேலைகளை முடிக்க வேண்டும். பணிகள் மதிப்பிடப்பட்ட பின்னர் மூன்றாம் கட்டமாக வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு, லிண்டர் இட்டு மட்டம் கட்டுதல் வேண்டும். பணிகள் மதிப்பிடப்பட்ட பின்னர் நான்காம் கட்டமாக வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு, கூரை வேலைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். பணிகள் மதிப்பிடப்பட்ட பின்னர் ஐந்தாம் கட்டமாக வழங்கப்படும் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு, தரை வேலைகள் முடிக்கப்பட்டு நிலை, ஜன்னல், கதவுகள் பொருத்தப்படல் வேண்டும்.
“UN HABITAT”இலச்சினை பொறிக்கப்பட்ட சிலீப்பை (அதில் பணத்தொகை எழுதப்பட்டிருக்கும்) வீட்டுத்திட்ட பயனாளிகளிடம் சுரேஸ் கொண்டு வந்து கொடுத்ததும், பயனாளிகள் அந்த சிலீப்பை “மக்கள் வங்கி”க்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கியில் பயனாளியின் பெயருக்கு சிலீப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை பாஸ் ஆகியிருந்தால் பணத்தை பெற்றுக்கொண்டு வந்து வீடு கட்டுவதற்கான வேலைகளை தொடங்கி விடுவர். (இப்படி ஐந்து கட்டங்களாக சுரேஸ் சிலீப்பை கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.)
சுரேஸ் சிலீப்பை கொடுத்தால் மாத்திரமே, வீட்டுத்திட்ட பயனாளிகள் அதை பணமாக்க முடியும். அந்தந்த கட்டங்களுக்கான வேலையை செய்ய முடியும். இந்த இடத்தில் தான் சுரேஸ் தனது பேரம் பேசும் வேலையை காட்டுகின்றார்.
வாழ்க்கைத்துணையிழந்த இளம் விதவைப்பெண்கள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள், பெண்களை மட்டும் அங்கத்தவர்களாக கொண்ட குடும்பங்கள் (வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள்), வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியலில் இருந்தால், அவர்களிடம் தன்னுடன் கொழும்புக்கு வந்தால் மட்டுமே வீட்டுத்திட்டம் கிடைக்கும் (சிலீப்பை தருவேன்), வீட்டுத்திட்டம் வேண்டும் என்றால் தன்னுடன் “அதுக்கு” வருமாறு பச்சையாகவே கேட்டு விடுகின்றார். யுத்தம் எல்லாவற்றையும் தின்று விட்டது. இழப்பதற்கு என்று இனி நம்மிடம் எதுவும் இல்லை.
அடை மழைக்கும், அனல் வெயிலுக்கும் குந்தியிருக்க ஒரு வீடாவது வேண்டுமே, வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இன்னும் எத்தினை காலத்துக்கு வீடில்லாமல் இந்த குடிலுக்குள் சீவியத்தை ஓட்டுவது? என்ற அவர்களின் நியாயமான, அத்தியாவசியமான, அவசர தேவையை, சுரேஸ் இப்படி பேரம் பேசி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கின்றார். உடன்பட்டு வர மறுப்பவர்களுக்கு தொல்லைக்கு மேல் தொல்லை கொடுத்து கல்லையும் கரைய வைத்து விடுகின்றார்.
இதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதி மக்கள், 32 ரூபாவுக்கு விற்கப்படும் “ஸ்டார் கதிரோட்டை” தமக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட நிதியில் (நான்காம் கட்ட நிதி) கொள்வனவு செய்து கூரை வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் “UN HABITAT” நிறுவனத்தின் கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதி வீட்டுத்திட்ட கண்காணிப்பாளரான வசந்தகுமார், மற்றுமொரு ஓடு தயாரிக்கும் நிறுவனத்துடன் (ஒரு ஓட்டின் விலை 39 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.) பேரம் பேசி விட்டு, “32 ரூபாவுக்கு விற்கும் ஓடு தரமற்றது.
நாங்கள் வந்து வீட்டு வேலைகளை மதிப்பிடும் போது அந்த ஓடுகளை நீங்கள் கட்டாயம் மாற்ற வேண்டி வரும். பிறகு உங்களுக்கு தான் வீண் செலவு. எனவே 39 ரூபாவுக்கு விற்கும் ஓட்டையே கொள்வனவு செய்து, வீட்டு கூரை வேலைகளை முடிக்க வேண்டும்.” என்று மக்களை நிர்ப்பந்தித்து, ஓடு தயாரிக்கும் அந்த நிறுவனத்துக்கும் நல்ல வருமானத்தை பெற்றுக்கொடுத்து, அந்த நிறுவனத்திடம் தான் பேசிய பேரத்தொகையையும் குறைச்சல் இல்லாமல் பெற்று வருகின்றார்.
இது மட்டுமல்லாமல் வீட்டுத்திட்டத்துக்கு தேவையான மணல், சல்லி, கருங்கற்கள், சீமெந்து கற்கள் (அரிந்து விற்கப்படும் கற்கள்), இரும்பு கம்பிகள், கட்டுக்கம்பிகள், சீமெந்து பைகள் போன்ற கட்டுமான பொருள்கள் விடையத்திலும் அதனுடன் தொடர்புடைய வர்த்தக கம்பனிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் பேரம் பேசி விட்டு, தான் எந்த நிறுவனத்துடன் பேரம் பேசிக்கொண்டாரோ அந்த நிறுவனத்திடம், அல்லது, குறித்த கம்பனியின் நாமத்தை உடைய கட்டுமான பொருள்களையே கொள்வனவு செய்து வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் மக்களை நிர்ப்பந்தித்து, காசு மேல் காசு பார்த்து வருகின்றார்.
குறித்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் (பாலியல் தொல்லைக்கு, இம்சைக்கு உள்ளான பெண்கள்) முல்லைத்தீவு மாவட்ட இந்திய வீட்டுத்திட்ட நேரடி கண்காணிப்பாளரிடம் முறையிட்டதை அறிந்த, “UN HABITAT” நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட வீட்டுத்திட்ட முகாமையாளரும், வீட்டுத்திட்ட தொழில்நுட்ப அதிகாரியும், இந்திய வீட்டுத்திட்ட நேரடி கண்காணிப்பாளரின் வீடு தேடிச்சென்று, அவரிடம் “குறித்த சம்பவங்களை பகிரங்கபடுத்த வேண்டாம் என்றும், உங்களுக்குள் மட்டும் இந்த விசயம் இருக்கட்டும். வேண்டுமானால் உங்களுக்கு “UN HABITAT” நிறுவனத்தில் முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை சம்பளம் கிடைக்கக்கூடியவாறு மேலதிகமாக வேலை ஒன்றை பெற்றுத்தருவதாகவும் பேரம் பேசலில் கடந்தவாரம் ஈடுபட்டுள்ளனர்.
“UN” உயர்ஸ்தானிகரே, அதன் பேசவல்ல, பொறுப்புக்கூறும் அதிகாரிகளே, இது உங்கள் கவனத்துக்கு!
நீதி கேட்டு நிற்கிறார்கள் உங்கள் நிறுவனத்தின் பணியாளர்களால் பாதிக்கப்பட்டவர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்பதை விடுத்து விட்டு, குற்றவாளிகளை காப்பாற்றுவதிலேயே உங்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் முனைப்பும், ஆர்வமும் காட்டுகின்றனர்.
குற்றத்தை மூடி மறைப்பதிலேயே முழுக்க முழுக்க அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். தொ(ண்)டு என்ன விளங்கவில்லையா? “தொண்டு” நிறுவனமா? இல்லை “தொடு” நிறுவனமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பதில் கூறப்போகின்றீர்கள்?
தமிழ் சி.என்.என் செய்தித்தளத்தின் வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-

Post a Comment

 
Top