கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் துன்பப்பட்ட போது விழித்திருந்து நாம் மக்களுக்காக போராடினோம். அந்த போராட்டம் இன்றும் சுறுசுறுப்பாக தொடர்கிறது.
நாம் மக்களுடன் இருந்தபோதும், இருக்கும்போதும் எப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களுக்கும், துன்பம் விளைவித்த கூடாரத்தை சேர்ந்தவர்களுக்கும் மனசாட்சியுள்ள மக்களால் ஒருபோதும் வாக்களிக்க முடியாது. ஆகவே எதிர்வரும் தேர்தலில், நமது ஜனநாயக மக்கள் முன்னணி மென்மேலும் பலம்வாய்ந்த ஒரு கட்சியாக வெற்றி பெறுவது உறுதியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று, கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இன்று நாம் கொழும்பில் நமது மக்களின்அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ள கட்சியாகும். எமது இந்த பலம் எதிர்வரும் தேர்தலில் இன்னமும் அதிகரிக்கும்.
இதன்மூலம் இந்நாட்டிலே ஆளுகின்ற அரசையும், எதிர்கட்சிகளையும் நாம் எம்மை திரும்பி பார்க்க வைப்போம்.
நாங்கள் இங்கே அரசியல்ரீதியாக பலம் பெறாவிட்டால் இங்கே எவரும் எங்களை மதிக்க போவது இல்லை. இது திண்ணம். இது தமிழ் பேசும் மக்களுக்கு இன்று மிக நன்றாக தெரியும்.
மேல்மாகாணத்திலே, குறிப்பாக கொழும்பிலே ஜனநாயக மக்கள் முன்னணி மென்மேலும் வாக்குகளை பெற்று பலம் வாய்ந்த ஒரு கட்சியாக உருவாக வேண்டும் என வடக்கு கிழக்கிலும், மலையகத்திலும் வாழும் மக்களும் பெரிதும் விரும்புகிறார்கள்.
அங்கு வாழும் எங்கள் உறவுக்கார மக்களின் இந்த விருப்புகளுக்கு இணங்க அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் உரிய வேளையில் எமக்கான ஆதரவுகளை வழங்கும் என நான் நம்புகிறேன்.
எம்மை அழித்துவிட களம் இறக்கப்பட்டிருப்பவர்கள், யார் என்பதும், அவர்கள் இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் என்றும் தலைநகர மக்களுக்கு நன்கு தெரியும். இந்த மனசாட்சியுள்ள மக்களை நம்பியே நான் களம் இறங்கியுள்ளேன்.
எங்கள் கொழும்பு மாவட்ட பட்டியலில் படித்த பட்டதாரிகள், மருத்துவ, ஆசிரிய, ஆன்மீக துறைகளை சார்ந்தவர்கள், இளைஞர்கள், பெண்கள் என்று பலதரப்புகளை சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழர்களுடன், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்துக்கள், கத்தோலிக்கர்கள் இடம் பெறுகிறார்கள். முதல்முறையாக நமது பட்டியலில் ஐந்து பெண்கள் முன்னணி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளார்கள். ஏற்கனவே ஆரம்பிக்கபபட்டுள்ள எமது தேர்தல் பிரச்சாரம் எதிர்வரும் நாட்களில் சூடு பிடிக்கும் போதும் இன்னமும் பல விடயங்கள் களத்துக்கு வரும்.

Post a Comment