சாந்தன், பேரறிவாளன் மற்றும் முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார். மூவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், அந்த மூவரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நிம்மதி , நெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பாக உள்ளதென தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் நெஞ்சங்களில் பால்வார்த்தது போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ளதை மட்டற்ற மகிழ்ச்சியோடு வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், இம்மூவரையும் விடுதலை செய்ய மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
தூக்கு தண்டனையை குறைத்த நீதியரசர்களை பாராட்டுவதாக தெரிவித்துள்ள திராவிட கழக தலைவர் கி. வீரமணி விரைவில் இந்த மூவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை வரவேற்பதாக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

