ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் ஏழு பேருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு முன்னர் இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூன்று கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
சுமார் 25 வருடங்களாக சிறைவாசம் இருந்த இந்த அரசியல் குற்றவாளிகளுக்கு இன்று தமிழக அரசும், உச்ச நீதிமன்றமும் நிவாரணம் வழங்கி இருப்பதை ஜனநாயக மக்கள் முன்னணி வரவேற்கிறது.
தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை முன்மாதிரியாக கொண்டு, இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் குற்றத் தண்டனை கைதிகளுக்கும், நீதிமன்ற விசாரணை கைதிகளுக்கும், பொலிஸ் விசாரணை கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென இலங்கை அரசை நாம் கோருகிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கை அரசு தானே உருவாக்கிய கற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தவறி விட்டது. மனித உரிமை மீறல்கள், அரசியல் தீர்வு ஆகியவை தொடர்பில் உலகுக்கு அளித்த உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்ற தவறிவிட்டது. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வெறுமனே காலத்தை கடத்தி கொண்டுள்ளது .
இந்நிலையில் இப்போது வெளியிடப்பட்டுள்ள நவநீதன் பிள்ளையின் சிபாரிசுகள், எதிர்வரும் மார்ச் மாத ஐநா மனித உரிமை பேரவை தீர்மானம் எப்படி இருக்கும் என்பதை கோடிட்டு காட்டுகின்றன. இந்த தீர்மானம் 2012, 2013 வருடங்களில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட தீர்மானங்களின் தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது. சர்வதேச பொறிமுறை வரப்போகும் எச்சரிக்கையை முந்தைய தீர்மானங்கள் இரண்டும் அறிவித்து இருந்தன. அப்போது இருந்தே இலங்கை அரசு, மின்சார நாற்காலியை பற்றி பேசி சிங்கள மக்களை ஏமாற்றி வருகிறது. இதோ, அதோ என்று சொன்னார்களே தவிர மின்சார நாற்காலி வரவே இல்லை.
உண்மையில் கடந்த இரண்டு தீர்மானங்களுக்கு முன்னர், 2009ம் வருடம் மே மாதம் யுத்தம் முடிந்து சில நாட்களுக்குள் ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை பற்றி யாரும் பேசுவது இல்லை. அதை அனைவரும் மறந்து விட்டார்கள். அந்த தீர்மானம் ஏறக்குறைய இலங்கை அரசை, பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக பாராட்டி கொண்டு வரப்பட தீர்மானம் ஆகும்.
பயங்கரவாதத்தை ஒழித்தமைக்கு பாராட்டு தெரிவித்து விட்டு, தேசிய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும்படி இலங்கை அரசை அந்த தீர்மானம் வலியுறுத்தியது. யுத்ததிற்கு முன்னின்று உதவி செய்து, பெருந்தொகையான அப்பாவி மக்களின் மரணங்களுக்கு காரணமாக இருந்த மேற்கத்தைய நாடுகளும், இந்தியாவும் இத்தகைய ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டதில் உடன் பட்டன. ஆகவே மேற்கத்தைய நாடுகளும், இந்தியாவும் தமக்கு எதிராக சதி செய்கின்றன என இலங்கை அரசு சொல்வது பொய். அவர்களும் ஒன்று சேர்ந்துதான் இலங்கையில் யுத்தம் செய்தார்கள். அதனால்தான் அவர்களுக்கும், இந்தியாவிற்கும் இலங்கை தொடர்பில் இன்று தார்மீக பொறுப்பு இருக்கின்றது.
இங்கே யாரும் உத்தமர்கள் கிடையாது. எல்லோரும் சேர்ந்து தமிழ் மக்களை சொல்லொண்ணா துன்பத்தில் அமிழ்த்தி விட்டார்கள். ஆகவே இன்று எல்லோரும் சேர்ந்துதான் நிவாரணம் தேட வேண்டும். ஆகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மேற்கத்தைய நாடுகளையும், இந்தியாவையும் நோக்கி கோரிக்கை விடுவதில் தவறு இல்லை. அதுபோல் உள்நாட்டில் தீர்வு இல்லாத போது வெளிநாட்டில் தீர்வு தேடுவதிலும் தவறு இல்லை. வெளிநாடுகளையும் நாடாமல், இந்த அரசு சொல்லும் பொய்களை நம்பிக்கொண்டு இரண்டாம் தர பிரஜைகளாக வாழ நாம் தயார் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment