முல்லைத்தீவு குமுளமுனையில் சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட முறிப்பு கிராமத்தில் சட்டவிரோதமான வகையில் மண் அகழ்வு இடம்பெற்றுவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதி மக்களின் தகவலையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமையை நேரில் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்
மேற்படி சட்டவிரோத கிரவல் அகழ்வால் அப்பகுதியின் இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
இது குறித்து முன்னாள் கரைத்துறைப்பற்று பிரதேச செயலரிடம் மக்கள் தெரிவித்தபோது, மேற்படி நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும், தற்போது தொடர்ந்து நடைபெறுவதாகவும் பிரதேச மக்கள் என்னிடம் நேரிலும் எழுத்து மூலமும் அறியத்தந்தனர்.
தங்கள் போக்குவரத்து, இருப்பிடங்களின் கட்டமைப்பு பாதுகாப்பு, சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் என பல ஆபத்துக்களை ஒருங்கே எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இந்த அகழ்வுப்பகுதி முறிப்பு குளத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளதோடு நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் இவ்விடயத்தை பார்வையிட்ட பின்பே முன்னாள் கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் அகழ்வை தடுத்து நிறுத்தியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கின்றேன் . விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

Post a Comment