ஆதவன்
கொமாண்டர் துமிந்த தலைமையில் 3000 இராணுவத்தினருக்கு மேல் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு பல தமிழர்களை கைது செய்துகொண்டு சென்றனர். அதில் பலர் இன்றுவரை எங்கு சென்றார்கள் என்பதே தெரியவில்லை என சாவகச்சேரியில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வயோதிபர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
இதேவேளை கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற பாரிய சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டபின்பு காணாமல் போன தனது கணவனை மீட்டுத்தருமாறு குடும்பப் பெண்னொருவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.
கடந்த 1990 ஆம் ஆண்டிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான யுத்தகாலப் பகுதியில் காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதியின் விசேட ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த விசாரணைக்கு வருகை தந்தவர்களில் பலர் இராணுவத்தினருக்கு எதிராக தமது சாட்சியங்களையளித்ததோடு கடந்த 1996 ஆம் ஆண்டு சாவகச்சேரி நாவற்குழிப்பகுதியிலிருந்த இராணுவ முகாமிற்கு பொறுப்பாளராகயிருந்த கொமாண்டர் துமிந்த தலைமையிலான இராணுவத்தினர் தமது பிள்ளைகள் மற்றும் கணவன் ஆகியோர் காணாமல்போனதாக சாட்சியமளிக்கப்பட்டது.
இதேவேளை மேற்படி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்த வயோதிபர் ஒருவர் கூறுகையில், மறவன் புலோவிலுள்ள தனது வீட்டிற்கு வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கடந்த 1996 ஆம் ஆண்டு தனது இரண்டு மகன்களையும் கொண்டு சென்றதாகவும் தனது மகன்களை கைதுசெய்ய வந்த இராணுவத்தினர் தமக்கு உரிய பதிலளிக்கும் மனநிலையிலிருந்திருக்கவில்லையெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை எங்களிடம் பல கேள்விகளைக் கேட்கும் இந்த ஆணைக்குழு எமது பிள்ளைகளைக் கொண்டுபோய் வைத்துள்ள இராணுவத்திடம் எதை கேட்டது எனவும் கேள்வியெழுப்பினார்.
அத்தோடு கொமாண்டர் துமிந்த தலைமையில் சாவகச்சேரியில் அந்தக்காலப்பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின் போது பலர் தலையாட்டிகளைக் கொண்டு கைதுசெய்யப்பட்டதாகவும் இராணுவம் கைதுசெய்தவர்களில் பலர் எங்கு சென்றனரோ தெரியவில்லையெனவும் சாட்சியமளித்தனர்.

Post a Comment