GuidePedia


தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசியது தொடர்பாக சட்டப் பேரவையில் அமைச்சர்களும் தேமுதிக எம்.எல்.ஏ.க்களும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் மீது தேமுதிக எம்.எல்.ஏ. எல்.வெங்கடேசன் (திருக்கோவிலூர்) திங்கள்கிழமை பேசினார். அப்போது, தனது தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அடுத்தடுத்து கோரிக்கைகள் விடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, நடைபெற்ற விவாதம்:
அமைச்சர் வைத்திலிங்கம்: தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நிதி தேவை. பிரதமர் மன்மோகன் சிங்கை தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளனர். பிரதமரிடம் மாநில அரசு கேட்ட நிதியை தரச் சொல்லுங்கள். பணிகளை விரைந்து மேற்கொள்ளலாம்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ்: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, மீனவர் மற்றும் மின்சார பிரச்னைகள் ஆகியன குறித்தே பிரதமரிடம் வலியுறுத்தினோம். நிதியைக் கேட்பதற்காக நாங்கள் செல்லவில்லை.
அமைச்சர்  நத்தம் ஆர்.விஸ்வநாதன்: பொது பிரச்னை என்று கூறிவிட்டு, கூட்டணி பேரம் பேசி, அது தோல்வி அடைந்து விட்டதால் திரும்பி வந்துள்ளீர்கள்.
அழகாபுரம் மோகன்ராஜ்: தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறது என்று தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் யாருடனும் பேரம் பேசவில்லை.
அமைச்சர் வைத்திலிங்கம்: அதிமுகவைப் பொருத்தவரை யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வது பற்றி கவலைப்படவில்லை. ஆனால், நீங்கள் மாட்டு பேரத்தை விட மிக மோசமாக நடந்து கொள்வதாக பத்திரிகைகளில் செய்திகள் கூறுகின்றன.
அழகாபுரம் மோகன்ராஜ்: இதே பத்திரிகை ஆதாரத்தை வைத்து நாங்களும் பேசலாமா?
அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்: மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பாக பிரதமரைச் சந்தித்தாக தேமுதிகவினர் கூறுகிறார்கள்.
இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முக்கியமாக தேவைப்படுவது நிதி. இயற்கை இடர்ப்பாடுகளில் தமிழகம் சிக்கத் தவித்தபோது தில்லிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நமக்கு போதிய நிதி தரப்படவில்லை.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய மானியங்களும், நிதி ஒதுக்கீடும் கிடைக்கவில்லை. தில்லியில் ஏதாவது கனமாகக் கிடைக்கும் என்று சென்றார்கள். ஆனால், ஏதுமின்றி குழப்பத்துடன் திரும்பி வந்துள்ளார்கள் என நாட்டு மக்கள் பேசுவதை பத்திரிகைகள் பிரதிபலிக்கின்றன.
இதற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதன்பின், அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் சமாதானம் செய்ததையடுத்து பேரவை நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்றனர்.
 
Top