GuidePedia

0
மாகாண சபை விடயத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கைகள் நியாயமானவையேயாகும். யுத்தம் முடிந்த பின்னரே அரசாங்கம் தமிழரின் கோரிக்கைகளை செயற்படுத்தியிருந்தால் இன்று சர்வதேச பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைமைத்துவ சபையின் உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
 
நாட்டில் 30 சதவீதமான சிறுபான்மை மக்களை பாதுகாக்க முடியாது அரசாங்கத்தினால் எவ்வாறு ஜனநாயக ஆட்சியினை நடாத்த முடியும்? அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் இலங்கைக்கே அவமானமாகும் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
 
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாகாண சபைக் கோரிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இன்று மாகாண சபை அதிகாரங்களையும் முக்கிய விடயமாக கோரி நிற்கின்றனர். அவர்களுக்கான உரிமைகள் இன்று மாகாண சபை முறைமையிலேயே தங்கியிருக்கின்றது. அதேபோல் அவர்களின் கோரிக்கையும் நியாயமானதாகவே உள்ளன. 2009ஆம் ஆண்டு யுத்த முடிவின் பின்னர் இலங்கையில் சமாதானம் நிலவும். 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அதற்கு மேலான அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் என அன்று ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். எனினும் இன்றுவரை அரசாங்கத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
 
அரசாங்கம் தமது பக்க செயற்திட்டங்களை சரிவரச் செய்து இருக்குமாயின் இன்று சர்வதேச நாடுகளோ அல்லது எதிர்க்கட்சியோ சிறுபான்மைக் கட்சிகளோ கேள்வி கேட்டிருக்க முடியாது. எனினும் இன்று அவை தலைகீழாக இடம்பெறுகின்றது. இலங்கையில் இடம்பெற்று வரும் அனைத்து சிக்கல்களுக்கும் அரசாங்கமே முக்கிய காரணமாகும். இன்று அரசாங்கம் தனித்து விடப்பட்டிருக்கின்றமைக்கும் இந்த மோசமான ஆட்சி முறையே காரணமாகும். இப்போதாவது அரசாங்கம் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
மேலும் இலங்கையில் 30 சதவீதமான சிறுபான்மை தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் வாழ்கின்றனர். எனினும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இலங்கையில் கடந்த சில வருடங்களுக்குள் அதிகளவிலான கோவில்களும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் கிறிஸ்தவ தேவாலயங்களும் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பின்னணி அரசாங்கத்தினால் ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை.
 
முப்பது வருட கால யுத்தத்தினை முறியடித்த இவர்களால் ஏன் இவ்வாறான குற்றவாளிகளை தண்டிக்க முடியாது? இன்று வீடியோ கமராக்கள் இருந்தும் தகுந்த ஆதாரங்கள் காணப்பட்டும் மதஸ்தலங்களை உடைத்த குற்றவாளிகள் தலைமறைவாகவே வாழ்கின்றனர். இதன் உண்மை என்னவெனில் இக்குற்றச்சாட்டின் பின்னணியில் அரசாங்கமே செயற்பட்டு வருகின்றது. இவ் செயற்பாட்டின் குற்றவாளிகள் அனைவரும் அரசாங்கத்தின் ஆதரவுடன் சுதந்திரமாக செயற்படுகின்றனர் என்பதே உண்மையாகும். இதனை அனைவரும் உணர்ந்து விட்டனர். அரசாங்கம் போலி நாடகம் ஆடி மக்களை ஏமாற்றுகின்றது. இன்று அனைத்து மக்களும் விழிப்புடனும் புத்திசாலித்தனத்துடனுமே செயற்படுகின்றனர்.
 
மக்களை பகைத்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தினால் ஆட்சி நடத்த முடியாது. அரசாங்கத்தின் இறுதிக் காலகட்டம் தொடங்கி விட்டது. நாட்டில் குற்றச் செயற்பாடுகள் இடம்பெற்று அதனை கண்டிக்கும் சரியான சட்டமும் நீதிச் சேவையும் செயற்படுமாயின் இன்று நாட்டின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க முடியும். எனினும் இலங்கையில் சட்டமும் நீதியும் அரசாங்கத்தின் சட்டப் பைக்குள் இருக்கின்றமையே சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
 
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைக்கும் காலத்தில் இவ் அனைத்தும் மாற்றப்படும். நாட்டில் சுயாதீன செயற்பாடுகள் சரிவர இடம்பெறும். சிறுபான்மை மக்கள் சரிவர மதிக்கப்படுவர். இக்காலத்தினை வெகு விரைவில் அமைத்து இலங்கையில் ஜனநாயகத்தினை உறுதிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

 
Top