GuidePedia

மாடறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த நான்கு நாட்களாக சிங்கள ராவய பௌத்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வந்த எதிர்ப்பு போராட்டமானது நேற்று முன்தினம் நள்ளிரவுடன்  முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 
சிங்கள ராவய அமைப்பினர் விடுத்திருந்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி பரிசீலனை செய்வதாக குறிப்பிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் பின்னரே சிங்கள ராவய அமைப்பின் தேரர்கள்  உண்ணாவிரதத்தினை கைவிட்டுள்ளனர்.
 
கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக சிங்கள ராவய பௌத்த அமைப்பினர் மாடறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாத யாத்திரை மேற்கொண்டிருந்ததுடன் கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்திற்கும் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தினையும் மேற்கொண்டிருந்தனர்.  
 
நாட்டில்  மாடறுப்பதை உடனடியாக தடை செய்யக் கோரிய அவர்களின் கோரிக்கையினை அரசாங்கம் பொருட்படுத்தாதன்  காரணத்தினால் தொடர்ந்து நான்கு நாட்கள் சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். 
 
எனினும் சிங்கள ராவய அமைப்பினரின்  கோரிக்கை தொடர்பில் விரைவில் பரிசீலனை செய்து தீர்வு காணப்படுமென ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்துடன் சிங்கள ராவய பௌத்த அமைப்பினர் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர்.
 
மேலும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களில் மூவரை நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. 
 
இது தொடர்பாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்ன தேரரிடம் வீரகேசரி தொடர்பு கொண்டு கேட்ட போது
 
எமது போராட்டம் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் ஜனாதிபதி எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே உள்ளது. எனினும் இலங்கையில் பௌத்த தேரர்களின் நிலைமை அவர்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறது என்பது இந்த சில தினங்களில் வெளிப்பட்டு விட்டது. இலங்கை நாடானது பௌத்த மதத்திற்கு சொந்தமானதாகும். இங்கு பௌத்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனினும் இன்று இலங்கையில் அவ்வாறான எந்தவொரு செயற்பாடும் இடம்பெறவில்லை. எமது குரலுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்காது முஸ்லிம் கொள்கைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும் இலங்கையில் மாடறுப்பதனை விரைவில் தடை செய்ய வேண்டும். இலங்கையில் மீண்டும் எமது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்
 
Top