GuidePedia

0
காணாமல் போனவர்கள், கண்களுக்கு முன்பாக பிடித்துக்கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது எமக்குத்தெரியாது. ஆனால் நாம் கண்டிருக்கின்றோம் யார் அவர்களை  எங்கே கொண்டு சென்றார்கள். கொலை செய்தவர்களும் அவர்கள்தான். நீதி சொல்பவர்களும் அவர்கள்தான். நீதிபதியும் அவர்கள்தான் என்றால் எப்படி உண்மை வெளிவரப்போகுது என மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்கூரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
 
மாந்தை   லூர்து அன்னை ஆலயத்தின் கொடியேற்றம் நேற்று புதன்கிழமை மாலை இடம் பெற்றது. இதன் போது காணமல்போன,கடத்தப்பட்டவர்களுக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
 
அதன் போது உரையாற்றுகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
மருதமடு தாயின் தொடக்ககால உறைவிடமாகிய இந்த புனித பூமியில் நாம் ஒன்று கூடி அன்னையின் கண்களுக்கு முன்னபாக இப்பகுதியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளவர்களுக்காகவும் இந்த ஊரிலே உயிர் நீத்த அனைவருக்காகவும் இறைவனிடம் ஒப்புக் கொடுத்து மன்றாடுகின்றோம். 
 
அது மட்டுமல்ல காணாமல் போனவர்கள் எங்களுக்கு முன்பாக பிடித்துக்கொண்டு போனவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது.
 
கொண்டு போனவர்களை எமக்கு தெரியும். கிட்டத்தட்ட எல்லா விபரங்களினோடும் போர் காலத்தின் கடைசிக்காலங்களில் அதாவது 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை  மன்னார் மாவட்டத்தில் 166 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.
 
அவர்களுடைய பெயர், விபரங்கள், அவர்கள் எப்போது காணாமல் போனார்கள்,கடத்தப்பட்டார்கள், அவர்களை யார் வந்து எப்போது கொண்டு போனார்கள் என்ற விடயம் எங்களிடம் உள்ளது. எல்லா விபரங்களோடும் நல்லிணக்க ஆணைகுழுவிடம் மன்னார் மறைமாவட்டத்தின் பெயரால் சமர்ப்பித்துள்ளோம்.
 
ஆனாலும் இந்த காணாமல் போனவருடைய விபரத்தை தேட வேண்டும் அது யார்? யார்? எல்லாம் காணாமல் போனார்கள் காணாமல் போனவர்களின் விபரங்கள் என்ன? யார் எப்பொழுது வந்து அழைத்துச் சென்றனர் அல்லது இரவில் தூக்கிக்கொண்டு போனார்கள் இதை எல்லாம் நம்பகத்தன்மையுடையதாக ஆராய்ச்சி செய்யவேண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தாகத்தில் தான் நாம் இங்கு வந்திருக்கின்றோம்.
 
நம்பகத்தன்மை கொண்டதாக ஒரு விசாரணை செய்யப்பட வேண்டும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என சொல்ல வேண்டும். 
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது எப்பதைத்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம் அதற்கு எமக்கு உரிமையிருக்கிறது.
 
ஆகவே எமது உரிமையை நாம் கைவிட்டுவிடாமல் கடைசிவரைக்கும் இதற்காக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கவேண்டும் கொலை செய்தவர்களை அல்ல. கொலை செய்தபோது காணமல்போனபோது, வாய்பேசாமல் இருப்போமாக இருந்தால் நாளைக்கு மக்கள் குறைசொல்வார்கள்.
 
ஆகவே இதனை நாம் மனதில்கொண்டு உண்மையை நாம் கடைசிவரை கண்டறியும்வரை காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். உங்களுடைய ஆதங்கங்களும் உங்களது பாரமும் உங்களது மனக்கவலையும் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
 
ஆகவே உங்கள் கரங்களிலிருந்து பறித்துக்கொண்டு காணாமல் போனவர்களுக்காகவும் உங்களுக்காகவும் இறைவனிடம் நாம் மன்றாடிக்கொண்டிருக்கின்றோம்.
 
இறைவன் தான் எமக்கு தைரியத்தை தர வேண்டும். அவர் தான் இதற்குப் பதிலை சொல்லித்தரக்கூடிய வழிமுறைகளையும் சொல்லித்தர வேண்டும். அல்லது வழிகளை திறந்துவிட வேண்டும் .ஆகவே எமக்கு வேறு எதுவும் வேண்டாம் .
 
இந்த கேள்ளிகளுக்கு பதில் வேண்டும் என்று கேட்கின்ற உரிமை எமக்குண்டு .
 
ஆகவே எமது உரிமையை நாம் மனதில் கொண்டவர்களாக அதற்காக நாம் எப்பொழுதுமே வலியுறுத்திக்கொண்டே இருப்போம் அதற்கான உறுதிப்பாட்டை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இவ்விடத்திலே நேற்றுடன்(12-02-2014)  58 உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன . இன்று எத்தனை என தெரியாது.
 
ஆகவே இப்படிப்பட்ட நிகழ்வுகள் இந்த இடத்திலே நடந்தது போன்று பொது புதைகுழிகள் இன்னும் எத்தனையோ இடங்களில் இருக்கும் எத்தனையோ இடங்களில் இப்படி நிலம் அகழ்வு செய்யப்படாததினால் இது போன்ற புதைகுழிகளை காணமுடியாமலிருக்கின்றது.
 
பிடித்தவர்ளை சித்திரவதை செய்து கொன்று புதைத்திருக்கும் அனைத்து புதைகுழிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். 
 
அப்பொழுது தான் உண்மையான நல்லிணக்கம் சமாதானம் இந்த நாடடில் பிறக்கும் அல்லது நல்லிணக்கம் சமாதானம் என்று பேசுவதில் அர்த்தமிருக்காது.
 
இவ்வாறான புதைகுழிகளை கண்டுபிடிக்காவிட்டால் இதற்கான நீதியை நாம் கேட்டு நிற்கின்றோம் உண்மையை நாம்கேட்டு நிற்கின்றோம் என்ன நடந்தது எங்களுடைய பிள்ளைகளுக்கு? எமது உறவினருக்கு என்ன நடந்தது என்று கேட்பதற்கு எமக்கு உரிமையிருக்கின்றது.
 
ஆகவே இந்த விடயத்திலே அனைவரும் இதய சுத்தியோடு முயற்சி எடுத்து இதற்கான பதிலைக்காண வேண்டும். நீங்கள் எடுக்கும் முயற்சியை நாம் கண்களால் பார்க்க வேண்டும். உண்மையாக இதயசுத்தியுடன் நம்பகத்தன்மை கொண்ட விசாரணையாக அது அமைய வேண்டும் காணாமல் போனவர்கள் பூஜ்ஜியம் என்று சொல்வதை நாம் கோள்விப்பட்டிருக்கின்றோம் .
 
இதை இந்த நாட்டிலிருக்கும் ஒரு பொறுப்புள்ள அதிகாரி சொல்கிறார். காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரித்துக்கொண்டு வருகின்றோம் என்று பாதுகாப்பு தரப்பிலிருக்கும் ஒரு அதிகாரி சொல்லுகிறார் ஆனால் அவர் உண்மையை சொல்லுவாராஇ
 
கொலை செய்தவர்களும் அவர்கள்தான். நீதி சொல்பவர்களும் அவர்கள்தான். நீதிபதியும் அவர்கள்தான் என்றால் எப்படி உண்மை வெளிவரப்போகுது.
 
உண்மை வெளிவருவதற்கு நீதியான விசாரணை செய்யப்பட வேண்டும் ஆனால் அவர்கள் சொல்கிறார்கள் இந்த போர்க்காலத்தில் காணாமல் போனவர்கள் பூஜ்ஜியம் என்று.
 
ஒருவரும் இல்லையாம் எனவேதான் இந்த விடயத்தில் ஒரு நம்பகத்தன்மையான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என கோருகின்றோம். இந்த நாட்டிலே நான் யாழ்ப்பாணத்திலிருந்த போது அங்கே செம்மணி புதைகுழி 500க்கும் மேற்பட்டவர்களை கொன்று புதைத்து விட்டார்கள்.
எனவே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் மனித உடல்கள் கடவுளால் கொடுக்கப்பட்ட உயிர் மனிதனுக்கு மான்பு உண்டு மனிதனுடைய மான்பை கௌரவப்படுத்த தாகத்தோடு செயற்படுவதற்கு எங்களுக்கு உரிமைஉண்டு.
 
 அவர்களுக்கு வாழ உரிமையிருக்கிறது ஆனால் அவர்களை நீதிக்கு முன்னால் நிறுத்தி அவர்களுடைய குற்றத்தை நிரூபிக்காமல் அவர்களை கடத்திக்கொண்டுபோய் கொலை செய்யமுடியாது.
 
ஆகவே இப்படிப்பட்ட உண்மைகளை நாம் அறிந்தவர்களாக நம்முடைய சொந்தங்களுக்காக மட்டுமல்ல எமது மத்தியிலிருந்து காணாமல் போன மக்களுக்காக பாடுபடவேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். 
 
நாட்டினுடைய சுபீட்சத்திற்காகவும் அதனுடைய வளர்ச்சிக்காகவும் அமைதிக்காகவும் இந்த நாட்டினுடைய நல்லிணக்கத்திற்காகவும் ஒரு நல்ல தீர்வுக்காகவுமே நாம் இதை செய்கிறோமே தவிர நாம் யாரையும் பழிவாங்கவோ அல்லது குற்றம் சுமத்துவதற்கோ அல்ல.
 
இந்த நாட்டிலே நிலையான சமாதானம் நல்லிணக்கம் எற்படவேண்டும் என்று சொன்னால் ஒரேவழி உண்மையை கண்டுபிடிப்பதுதான் உண்மையை எங்களுக்கு சொல்லுங்கள் பொய்க்கு பின்னால் சென்றுவிட்டு பொய்தான் உண்மை என்று சொல்லுவதில் பிரயோசனமில்லை அல்லது இரண்டாம் தரமான பதில்கள் எங்களுக்கு தேவையிலிலை நம்பகதன்மையான விசாரணை ஒன்றுவைத்து நாங்கள் திருப்திகொள்ளும் அளவிற்கு உங்களுடைய பிள்ளைகளக்கு இததான் நடந்தது நான்தான் கொண்டு சென்றேன் என்று சொல்ல வேண்டும்.
 
அதை சொல்லக்கூடியதாக இருந்தால்தான் தென்னாபிரிக்காவில் நடந்ததைபோல ஒரு நல்லிணக்கம் ஏற்ப்படும் தென்னாபிரிக்காவில் குற்றங்களை புரிந்தவர்களை அச்செயல்ளை புரிந்தவர்கள் மக்களின் உயிர்களை பறித்தவர்கள் ஊடகங்களின் முன் தங்களது பிழைகளை சொல்லி அழுது அழுது வெளிப்படுத்தினார்கள்.
 
அதை கேட்டுக்கொண்டிருந்த பாதிக்கப்படவர்களின் உறவினர்கள் அழுது புலம்பினார்கள் இதன் வழியாகத்தான் தென்னாபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்பட்டது.
 
உண்மைகளை வெளிப்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எமது நாட்டின் தலைவர்களின் கடமையாகும் அவ்வாறான கடமையை செய்தால் உண்மையாக நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட்டு நாட்டில் ஒரே குடும்பமாக ஒரே மக்களாக எல்லோரும் கஸ்டப்பட்டு உழைத்து அழகான தேசமாக கடவுள் கொடுத்த இந்த நாட்டை அழகுள்ள நாடாக நாம் அதை காண்பதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை.
 
 ஆனால் போன காரியத்திற்கு பழைய காரியத்தை கிளற வேண்டாம். நீங்கள் வருங்கால விடயங்களை மட்டும் பாருங்கள் என்று சொல்வதேல்லாம் பொய்யான பாதை.
 
 அதில் உண்மையான நல்லிணக்கம் சமாதானம் இருக்காது. உண்மையைக்கண்டு நீதியை செயற்படுத்தினால் தான் உண்மையான நல்லிணக்கம் வரும் சமாதானம் ஏற்படும்.
 
ஆகவே இந்த நாட்டிலிருக்கின்ற தலைவர்களுக்காக நாம் ஒன்றை வேண்டுகிறோம் கடவுளிடம் மன்றாடுகின்றோம் இப்படிப்பட்ட பாதைகளிலே செல்வதற்கு அவர்களுக்கு வெளிச்சம் வேண்டும் உறுதிவேண்டும் நல்ல உள்ளம் வேண்டும் தைரியம் வேண்டும் மனதிலே சுத்தம் வேண்டும் ஆகவே இப்படியான பாதையிலே நாட்டை இட்டு சென்று உண்மையில் எமது தாயகம் என்று நாங்கள் மகிழ்ச்சியோடு கூறக்கூடியதாக எமது தாய் இந்த நாடு என்று கூறத்தக்கதாக இந்த நாட்டிலே உண்மையை கண்டுபிடிக்கின்ற அந்த உண்மை இடம்பெறவேண்டும். அதன் வழியாகத்தான் உடன்பாடு மற்றும் நல்லிணக்கம் ஏற்படும்.
 
அவ்வாறு நடந்தால்தான் நாம் இந்த நாட்டின் பிள்ளைகள் என்ற உணர்வோடு இந்த நாட்டை முன்னேற்றலாம் ஆகவே இப்படிப்பட்ட காரியங்களை நாம் செய்வது பழிவாங்க அல்ல குற்றம் பிடிப்பதற்கு அல்ல இந்த நாடு உண்மையின் பக்கம் திரும்பி சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
 
அவ்வாறு இருந்தால் தான் நாம் எல்லோரும் கைகளை கோர்த்து நின்று இந்த நாட்டை வளர்த்தேடுக்க முடியும். உண்மைக்காகத்தான் நாங்கள் இவ்வாறு செய்கின்றோம்.
 
ஆகவே இவ்வாறு ஒரு உயர்ந்த நோக்கத்தோடு இதை செய்வதற்கு நாம் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஆயர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top