GuidePedia

0
ஆதவன்
செம்மலைப்பகுதியில் இன்று பகல் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மண் அகழ்வு வட  மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தலையீட்டில் தடுத்து நிறுத்தப்பட்டது. 
 
குறித்த பகுதியில் மண் அகழ்வு செய்யப்படுதல் சட்டத்திற்கு புறம்பானது 
என அவர்களுக்கு கடுமையாக அறிவித்து மண் அகழ்வினை தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாது அவர்களைக் கொண்டே மண் அகழ்ந்த கிடங்குகளை மூடவைத்தார். 
 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
இராணுவத்தினரால் செம்மலைப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு ஆங்காங்கே நடைபெற்றுகொண்டிருக்கிற நிலையில் இன்று காலையும் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றது. 
இந்நிலையில் மேற்படி மண் அகழ்வை அப்பகுதி மக்கள் தடுக்க முனைந்து அது பயனளிக்காத நிலையில் வட  மாகாண சபை உறுப்பினர் ரவிகரனுக்கு பிரதேச மக்கள் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளனர். 
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற ரவிகரன் அங்கு மணல் ஏற்றிக்கொண்டிருந்த இராணுவத்தினரும் குறித்த விடயம் தொடர்பாக கேட்ட போது, இராணுவத்தினர் தமது இராணுவ முகாமுக்கு கொண்டுச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
 
இதன்போது ரவிகரன் இராணுவத்தினரிடம், மணல் ஏற்றுவதற்கு முன்னர் உரிய இடத்தில் அனுமதி பெறவேண்டும் எனவும் மக்கள் குடியிருப்புகள் மற்றும் பாதைகளுக்கு அண்மையில் மண் அகழ்வது அப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் இயல்பு நிலையை வெகுவாக பாதிக்கும் எனவும் விளக்கி மேற்படி மண் அகழ்வினை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களைக்கொண்டே மண் அகழ்ந்த கிடங்குகளை மூடவைத்தார்.
அதன்பின்னர் அங்கிருந்தே கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படி மண் அகழ்வு பற்றி தெரிவித்தார். இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வுகளில் ஈடுபடவேண்டாம் என்பதை ஏனைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கும்படி தெரிவித்ததாகவும் கூறினார்.

Post a Comment

 
Top