GuidePedia

0
மாடுகளை அறுத்து கொலை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் சிங்கள மற்றும் தமிழ் தொன்மையினை கொச்சைப்படுத்தும் இழிசெயலுக்கு இலங்கையில் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. மாடறுப்பதை உடனடியாக நிறுத்தாவிடின் பல நூற்றுக்கணக்கான சிங்களவர் உயிர்த்தியாகம் செய்வர் என்று சிங்கள ராவய அமைப்பு எச்சரித்துள்ளது. 
 
மாடு வெட்டுவதற்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு கடந்த 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு முன்பிருந்து கொழும்பு வரையிலான பாத யாத்திரையினை ஆரம்பித்திருந்தது. இதன் இறுதிக்கட்டமாக நேற்று கொழும்பில் சிங்கள ராவய அமைப்பினர் தமது பாத யாத்திரையினை முடிவிற்குக் கொண்டு வந்தனர். 
 
இதன்போதே இவ் பௌத்த அமைப்பினால் மேற்கண்டவாறு கருத்து தெரிவிக்கப்பட்டது. 
 
இதன் போது கருத்து தெரிவித்த சிங்கள ராவய பௌத்த அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிடுகையில்,
 
இலங்கையில் இன்று பாவச் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இலங்கையின் தொன்மையான சிங்கள பண்புகளையும் தமிழர் மதப் பண்புகளையும் அழித்து எம்மை கொச்சைப்படுத்தும் வகையில் இன்று அந்நிய மதத்தவர் செயற்பாடுகள் அமைந்துள்ளது. குறிப்பாக நாட்டில் மாடறுப்பதென்பது மிகப்பெரிய பாவச் செயலாகும். அதனையே இன்று இந்த நாட்டில் செய்து வருகின்றனர். 
 
மாடுகளை அறுத்து கொலை செய்யும் பாவச் செயலினை உடனடியாக நிறுத்தாவிடின் இதற்காக கடுமையான விளைவுகளை பலர் சந்திக்க வேண்டியிருக்கும். இவ் விடயத்தில் பொறுமையாக வட்டமேசைகளில் அமர்ந்திருந்தது பேச்சு வார்த்தைகளை  நடத்தவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மகஜர் கையளித்து இது தொடர்பில் பேசவோ நாம் தயாராக இல்லை. எமக்கு வேண்டியதெல்லாம் இப்பாவச்செயலினை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பது மட்டுமே. 
 
கடந்த ஆண்டு மாடு அறுப்பதனை தடுக்கக் கோரி எமது தேரர் ஒருவர் தன்னை தானே தீ மூட்டி உயிர்த் தியாகம் செய்து நாட்டிற்கே பாரிய எச்சரிக்கையினை விட்டார். அதே பாணியினையே நாமும் கையாள்வோம். உடனடியாக இவற்றினை நிறுத்தாவிடின் எமது உயிர்த்தியாகத்தின் மூலமாவது அரசாங்கத்திற்கு பலத்த கோரிக்கையினை விடுவோம் எனவும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் நேற்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிங்கள ராவய அமைப்பினைச் சேர்ந்த அதிகளவிலான பௌத்த பிக்குமார்களும் ஆதரவாளர்களும் பதாகைகளையும் கோஷங்களையும் எழுப்பி எதிர்ப்பு பாதயாத்திரையில்  கலந்து கொண்டிருந்தனர். 

Post a Comment

 
Top