GuidePedia

0
தமிழ் பெண்களை இராணுவத்தில் இணைக்கவில்லை எனவும் அவ்வாறு இணையுமாறு இராணுவத்தினர் வற்புறுத்தினால் தன்னிடம் நேரடியாக முறையிடலாம் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் என கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுரேந்திர ரணசிங்க தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சி ஒத்துழைப்பு நிலையத்தில் நேற்று தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் இராணுவத்தினர் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு வற்புறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது எனச்சுட்டிக்காட்டி அது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன என வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள எப்பாகத்தில் இருந்தும் இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக்கொள்ள முடியும். இன்று பலர் தொழில்வாய்ப்புக்கள் இன்றியுள்ளனர். இவ்வாறு இராணுவத்தில் இணைவதன் மூலம் அடிப்படை சம்பளமாக 25ஆயிரம் ரூபாவினைப் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் எந்தவித கட்டாயத்தின் அடிப்படையிலும் நாம் இராணுவத்தில் எவரையுமே இணைப்பதில்லை. சுய விருப்பின் அடிப்படையிலேயே இணைத்துக்கொள்கிறோம்.
 
எனவே எவரேனும் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளவதற்கு வற்புறுத்தினால் நேரடியாக என்னிடம் முறையிடலாம். இல்லையேல் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறையிட முடியும்.
 
அவ்வாறு எந்வொரு இராணுவ அதிகாரி செயற்பட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Post a Comment

 
Top