சம்பூரில் கட்டுவலைத் தொழிலுக்கு தடை
மூதூர் கிழக்கு சம்பூர் இடைதங்கள் முகாம்களில் வாழ்கின்ற சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை மக்களின் பாரம்பரிய கட்டுவலைத் தொழிலுக்கு 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்று அகதி மீனவர்களின் வலைகளும் கடற்படையினரால் அறுத்து வீசப்பட்டுள்ளன என்று மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அப்பகுதியில் கட்டுவலை தொழிலை நம்பி 180க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சொந்த நிர்ணிம் பறிபோயுள்ளது அரசாங்கத்தால் வழங்கி வந்த நிவாரணிம் மூன்று வருடங்களாக வழங்கப்படுவதில்லை. தற்போது நாம் ஜீவனோபாயமாக நம்பி இருந்த கடற்தொழிலும் தடைசெய்யப்பட்டால் வறுமையில் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை என மூதூர் பிரதேச மீனவர் சங்கங்களின் சமாச தலைவர் ம.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்தார்.
சுமார் ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் ருபாய் பெருமதியியிலான தமது வலைகளை கடற்படையினர் வெட்டி நாசப்படுத்தியுள்ளனர். இதற்கான மூலதனத்தை கூட தாம் கடன்பட்டே வாங்கி தொழில் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு வரும் கப்பல்களுக்கு தடையாக உள்ளதன் காரமாகவே இந்த தொழிலை தடைவிதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வலைகள் அறுக்கப்பட்டு பாதிக்கப்ட்ட மீனவர் பாக்கியராசா (வயது-45)தெரிவிக்கையில்,
தனக்கு 15 வயது இருக்கும் காலம் முதல் இத் தொழிலை செய்து வருகின்றேன். இத்தொழிலை தவிர எனக்கு வேறு எந்த தொழிலும் செய்ய தெரியாது. தொழிலை செய்ய நாம் தடுக்கப்பட்டால் சாவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
கடற்படையினரால் வலை வெட்டப்பட்ட விடயம் தொடர்பாக சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய வலைகளை அகற்றுமாறு கடற்படையினர் அறிவித்தள்ளனர். இதற்கு தமக்கான நீதி கிடைக்கும் வரை வலைகளை அகற்ற மாட்டோம் என மீனவர்கள் என்றும் மீனவர் சங்க சமாச தலைவர் கிருஸ்னப்பிள்ளை தெரிவித்தார்.

Post a Comment