அரசியற் தஞ்சம் கோரியிருந்த அல்ஜீரிய நாட்டின் பிரஜை ஒருவர் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது, பொலிஸ் அதிகாரி ஒருவரின் வார்த்தைப் பிரயோகங்களால் அவமானப்படுத்தப்பட்ட வழக்கு சுவிஸ் நாட்டின் லூசான் நகரிலுள்ள உச்ச நீதி மன்றத்தில் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
2007இல் பா(b)சல் நகரில் இடம் பெற்ற ஆபரண, கடிகாரக் கண்காட்சியில் திருடியிருக்கலாமெனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட போது அவரைக் கைது செய்த பொலீஸ் உத்தியோகஸ்தர் ஊத்தை அகதியென்றும், வெளிநாட்டுப் பன்றியெனவும் பேசி அவமதித்த வழக்கு, அப்போது விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி குற்றவாளியெனக் காணப்பட்டு தண்டணையும் வழங்கப்பட்டிருந்தது.
தற்சமயம் லூசானில் இடம் பெற்ற மறுவிசாரணையின் போது சமூகமளித்த நீதிபதி, அச்சொற்கள் அவமானப்படுத்துவன இல்லையென்று தீர்ப்புக்கூறி, முன்னைய தீர்ப்பை சக்தியிழக்கச் செய்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் பன்றி, ஊத்தை போன்ற வார்த்தைகள் சர்வ சாதரணமாகப் பிறரைக் கோபத்திற் கடிந்து பேச உபயோகிக்கப்படுவன என்றும், அச்சொற் பிரயோகங்கள் மனித மதிப்பைக் குறைப்பதல்ல எனவும் தீர்ப்பின்போது குறிப்பிட்டார்.
சுவிஸ் நாட்டில் வெளிநாட்டவர்களின் நிலைபற்றிய கருத்தாடல் உச்சம் பெற்றிருக்கும் இன்றைய நிலையில், தனிமனித தன்மானத்தை மிகவும் இழிவாகக் கணக்கிடும் இத்தீர்ப்பானது பல வாதாட்டங்களுக்கு வித்திட்டு சர்வதேச விமர்சனங்களுக்கும் இடமளித்துள்ளது.
அதிகமான வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பால் ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற அசெளகரிய நிலைக்கு இத்தீர்ப்பு ஊக்கமும், ஆக்கமும் அளிப்பதாக மனிதவுரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Post a Comment