GuidePedia

0
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாண் ஒன்றினுள் சிறிய கம்பி ஆணி ஒன்று இருந்த குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் கடை உரிமையாளர் மற்றும் பேக்கரி உரிமையாளர் ஆகிய இருவருக்கும் பதினேழாயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களிருவருக்கும் சிலாபம் மேலதிக மாவட்ட நீதிபதியும், நீதவானுமாகிய கல்ஹாரி கே.லியனகேவினால் இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டது.
 
சிலாபம் ஜயபிம பிரதேசத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவருக்கும், சிலாபம் வட்டக்களி பிரதேசத்தைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஆகிய இருவர் மீதே பாணினுள் கம்பி ஆணி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த கடை உரிமையாளரின் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாண் ஒன்றினை விலைக்கு வாங்கிய ஒருவர் அப்பாணை வீட்டுக்குக் கொண்டு சென்று உண்பதற்கு ஆயத்தமான போது அப்பாணினுள் கம்பி ஆணி ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
 
பின்னர் பொதுச் சுகாதார பரிசோதகரினால் இவ்விடயம் தொடர்பில் சிலாபம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு குறித்த கடை உரிமையாளரும், பேக்கரி உரிமையாளரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே இவ்விருவருக்கும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. சிறுபிள்ளை ஒன்று உண்பதற்கு ஆயத்தமான பாணினுள்ளேயே இந்த கம்பி ஆணி இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
கவனயீனமான முறையிலும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் மனிதப் பாவனைக்கென உணவுப் பண்டம் தயாரித்ததற்காகவும், அவ்வாறான உணவுப் பண்டத்தை விற்பனைக்கு வைத்திருந்ததற்காகவும் இவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
சிலாபம் பொதுச் சுகாதார பரிசோதகர் பீ.ஏ.சமந்த மற்றும் முன்னேஸ்வரம் பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.ஏ.பி.பெர்னாண்டோ ஆகியோரினால் இவ்விருவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top