ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான விசாரணைக் குழுவினரிடம் சாட்சியமளித்தவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின் அது தொடர்பாக குறித்த ஆணைக்குழுவில் முறையிடலாம் எனவும், எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய சாட்சியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என இந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகள் நேற்று இப்பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற பின்னர் மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இருபாலை தெற்கு, இருபாலை கிழக்கு, கல்வியங்காடு, கோப்பாய் தெற்கு, கோப்பாய் மத்தி, கோப்பாய் வடக்கு, உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் தெற்கு ஆகிய பத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்து அழைக்கப்பட்டவர்களில் 43 பேர் இன்று (நேற்று) சமூகமளித்திருந்தனர். இவர்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளோம். இதேவேளை 93 முறைப்பாடுகள் இன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடுகளில் 6 பேரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளோம். இதற்கமைய ஏனையவர்களிடம் விசாரிப்போம் என்றார்.
இதேவேளை அங்குகூடியிருந்த மக்களும் ஊடகவியலாளர்களும் குறித்த காணாமற்போனோர் தொடர்பான விசாரணைக் குழுவில் முறைப்பாடுகளைப் பதிவு செய்தவர்களிடம் இராணுவமும், பொலிஸாரும் விசாரித்து வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன் சாட்சியமளித்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க முடியுமா? அவர்களுக்கு என்ன தீர்வுகளைச் சொல்லப் போகின்றீர்கள் போன்ற கேள்விகளைக் கேட்டனர்.
அதற்கு குறித்த ஆணைக்குழுவின் தலைவர் பதிலளிக்கையில், இராணுவம், பொலிஸ் உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரும் எம்மிடம் கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தமுடியாது எனவும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின் எமக்குத் தெரியப்படுத்தினால் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இவர்களுடைய பாதுகாப்புத் தொடர்பில் இன்னமும் பாராளுமன்றத்தின் ஊடாக சட்டம் கொண்டுவரப்படவில்லையாயினும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
இதன்போது பொதுமக்கள் காணாமற்போனோர் தொடர்பான சாட்சியங்களில் ஈ.பி.டி.பி., இராணுவம், கருணா குழுவினர் உள்ளிட்டவர்களை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் அவர்களிடமும் விசாரிப்பீர்களா என கோரியிருந்தனர்.
இதற்கு ஆணைக்குழுவின் தலைவர் பதிலளிக்கையில், தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்துவது என்பதற்கு அப்பால் கிடைக்கின்ற முறைப்பாடுகளுக்கு விசாரணைகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் இறுதியானதா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோது ஆணைக்குழுவின் தலைவர் பதிலளிக்கையில், இந்தக் குழுவின் விசாரணை இறுதியானதாக அமையாது. இந்த விசாரணைகளுக்கு அமைய நிபுணத்துவம் வாய்ந்த குழுவினருடைய விசாரணை ஒன்றை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. ஆயினும் தற்பொழுது அந்தக் குழுவினருடைய விபரங்களை என்னால் வெளியிட முடியாமல் உள்ளது. எமது குழுவின் விசாரணைக்கு மேலாக நிபுணத்துவம் வாய்ந்தவர்களாலும் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.

Post a Comment