GuidePedia

0
காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பகத் தன்மையற்றவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று ஏகமனதாக யாழ்ப்பாணத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமாகிய எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
 
இதேவேளை இக்கூட்டத்தில் இரணைமடு, யாழ். நீர்விநியோகத் திட்டத்தினால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்த்து இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட் டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித் தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்குஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்.பொது நூலகத்தில் உள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.
 
இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
 
இக்கலந்துரையாடலில் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று இரணைமடு, யாழ்.நீர்விநியோகத் திட்டம் தொடர்பானதாகும். அது குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் நியமித்துள்ள நிபுணர் அறிக்கையில் இருக்கின்ற கருத்துக்கள் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு அது தொடர்பாக முழுமையாக இன்று காலை ஆராயப்பட்டுள்ளது.
 
தற்போது இருக்கின்ற முறையிலேயே இத்திட்டம் அமுல் செய்யப்பட்டால் அது இதுவரை கால வரைக்கும் இரணைமடுக் குளத்திலிருந்து நீர்ப்பாசன வசதிகளை அனுபவித்து வந்த கிளிநொச்சி விவசாயிகளுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளமையினை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
 
ஆனாலும் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் அல்லது கைவிடப்படக் கூடாது என்பது எங்களுடைய ஏகோபித்த முடிவாக அமைந்தது.
ஏற்கனவே இத்திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்போது இந்த நீரை உபயோகிப்பவர்களுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை எழுதப்பட்டிருக்கின்றது. ஆகையினால் அந்த அடிப்படையில் இத்திட்டத்தை மாற்றியமைப்பதற்குத் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் ஏனையோருடனும் பேச்சுவார்த்தையை காலதாமதம் இல்லாமல் முன்னெடுத்து விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும்.
 
இதற்கு ஏதுவாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருக்கின்ற உரிய நீர்வழங்கல்களையும் சமகாலத்தில் விரித்தி செய்ய வேண்டும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் இரண்டாவதாக, காணாமற்போனவர்களைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நம்பகத்தன்மை அற்றது என இன்றைய தினம் (நேற்று) கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளார்கள்.
 
இந்த ஆணைக்குழுவினர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விசாரணைகளுக்காக வந்திருந்தபொழுது அந்த விசாரணை நடைபெற்ற இடத்திற்கு அருகில் இன்னொரு கூட்டத்தைக் கூட்டி ஆணைக்குழுவினரிடம் முறைப்பாடு செய்ய வந்தவர்களைத் தடுத்து பணம் கொடுத்து மரண சான்றிதழ்கள் வழங்கிய சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
 
இந்த விடயம் இந்த ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பொழுதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வேண்டுமென்றே ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியங்கள் கொடுக்கப்படாமல் தடுக்கப்பட்டிக்கின்றது.
 
அத்துடன் இந்த ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற சட்ட மா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த அரச சட்டவுரைஞர் சமிந்த அத்துக்கோரள என்பவர் காணாமற்போனவர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு வழக்கிலும் அதிலிருந்து எழுந்த நீதிமன்ற விசாரணைகளிலும் இராணுவத்தின் சார்பாக ஆஜராகி சரணடைந்தவர் என்றொரு விடயம் இடம்பெறவில்லை என வாதாடுகின்றவர். இது சட்டத்தின் கீழான ஒரு பாரிய 'நோக்கத்தின் முரண்பாடு' ஆகும்.
 
இதனால் இந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டில் நம்பகத்தன்மை இல்லை என நாம் இந்தக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.

Post a Comment

 
Top