தனது வருடாந்த அறிக்கையை நேற்று வெளியிட்ட நவநீதம் பிள்ளை இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகள் மூலம், இலங்கை தொடர்பில் பின்பற்றப்படுகின்ற
முன்கூட்டியே முடிவெடுக்கப்பட்ட அரசியல் மற்றும் அநீதியான நிகழ்ச்சி நிரல் வெளிப்படுவதாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்பாடுகள் எனும் தொனிப்பொருளில்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை நேற்று 18 பக்கங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதனைப் பாராட்டியுள்ள இந்த அறிக்கையின் இறுதியில், இலங்கையில் மனித உரிமைகளின் முன்னேற்றத்திற்கான 13 சிபாரிசுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த கடந்த கால சம்பவங்கள்
தொடர்பில் சுயாதீன மற்றும் நம்பிக்கையான விசாரணை நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு
இலங்கை அராங்கம் தவறியுள்ளதாக நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என அவர் சிபாரிசு முன்வைத்துள்ளார்.
சிறுபான்மை இனப்பிரிவினர், ஊடகம் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான
தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி
பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மற்றுமொரு சிபாரிசு
செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் உட்பட சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய சுயாதீனமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான செயற்பாட்டு ரீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தலையீடுகள் இன்றி சிவில் செயற்பாடுகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறும் நவநீதம் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள தேசிய வெற்றி தின கொண்டாட்டத்தை அனைத்துப் பிரஜைகளும் குழுக்களாகவோ அல்லது தனித்தனியாகவோ கொண்டாடுவதற்கு இடமளித்தல் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் கொண்டாடும் வகையில் உரிய கொண்டாட்ட முறையை ஏற்படுத்துவதற்காக தேசிய மட்டத்தில் கருத்தறியப்படல் என்பனவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுபோன்ற சிபாரிசுகள் தவறான அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது அநீதியான விடயங்களை ஆதாரமாகக் கொண்டே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை முற்றாக நிராகரித்துள்ளதுடன் தமக்கே உரித்தான நல்லிணக்க செயற்பாடுகளுக்குரிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் அந்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயினும், இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் பூர்வாங்க அறிக்கையின் சிபாரிசுகளின் பெரும்பாலானவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர்
தெரிவிக்கின்றமையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமையின் கீழ் தொடர்ந்தும் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரியுள்ளமை
ஆணையாளர் அலுவலகத்தின் முறையான அனுகுமுறையின் கீழ் இடம்பெறுகின்றதா, என்ற
வினா எழுவதனைத் தவிர்க்க முடியாது எனவும் ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்
பிரதிநிதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இறைமை உள்ள நாடொன்றின் விடயங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் பக்கசார்பாக செயற்படுகின்றமை நேற்று வெளியிடப்பட்ட
அறிக்கையின் மூலம் தெளிவாகின்றமையால், அதன் மூலமான முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை முற்றாக நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
முழு அறிக்கையை கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பின் மூலம் காணவும் -
http://www.ohchr.org/EN/HRBodies/HRC/RegularSessions/Session25/Documents/A-HRC-25-23_AEV.doc

Post a Comment