புனர்வாழ்வு பெற விரும்பும் தமிழ் அரசியல்கைதிகளிடம் கடிதங்கள் சேகரிக்கும் செயற்பாடு கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெகசின் சிறைச்சாலையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளிடம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடிதம் கோரியிருந்ததாகவும் அதனடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெற விரும்புவதாக கடிதங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் சுமார் 120 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நாட்டில் பல பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகளிலும் கணிசமான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டும் சுமத்தப்படாமலும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் அல்லது விசாரணைகளை துரிதப்படுத்தி சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோன்று தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தமக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறான நிலையில் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் அரசியல் கைதிகள் தாமாக விரும்பினால் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கலாம் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புனர்வாழ்வு பெற விரும்பும் தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை அத்தியட்சரின் ஊடாக சட்ட மா அதிபருக்கு விலாசமிட்டு தமது கடிதங்களை வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது. அதேவேளை தமது விடுதலை அல்லது புனர்வாழ்வு தொடர்பில் ஜனாதிபதி நியாயமான தீர்வொன்றைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பகிரங்க மடலொன்றினை தமிழ் அரசியல் கைதிகள் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment