GuidePedia



இலங்கையை பௌத்த நாடு என்று சொல்லி பெருமையடைந்துகொள்ளும் சிங்கள ராவய இயக்கம், இன்று மாடுகளை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாத யாத்திரைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றனர். அஹிம்சையை போதிக்கும் இந்த பௌத்த பிக்குகள் மன்னாரில் கிடைத்திருக்கும் மனித எலும்புக் கூடுகள் சம்பந்தமாக ஏன் அக்கறை கொள்ளவில்லை' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'பௌத்த மதம் என்பது இந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை அகற்றி இந்து மதத்தில் இருக்கும் புனிதமான விடயங்களை மட்டும் எடுத்துச் சென்று புத்த பகவானால் உருவாக்கப்பட்ட மதமாகும். இந்த புனிதமான பௌத்த மதத்தை போதிக்கும் இலங்கையிலுள்ள அநேகமான பிக்குகள் இன்று பாதையில் ஆர்ப்பாட்டம் செய்வதிலும் அடிதடிகளில் ஈடுபடுவதும் அரசியல் செய்வதிலுமேயே அக்கறை செலுத்துகின்றனர்.

இந்த மாட்டறுப்பு விவகாரத்திலும் கூட இவர்கள் பௌத்த மதத்திற்காக இதை செய்யவில்லை. மாறாக முஸ்லிம் மதத்தினரை பழிவாங்கும் முகமாகவே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். இந்த நாட்டை முழு பௌத்த நாடாக மாற்றுவதற்கான திட்டம் இதுவே.

முஸ்லிம் மக்களின் கலாச்சாரத்திற்கும் மதத்திற்கும் எதிராக பெரும்பான்மை இனத்தவர்களினால் அல்லது பௌத்த பிக்குகளால் நடாத்தப்படும் நடவடிக்கைகளை தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

இன்று சிங்கள ராவயவினா ஹெல உரிமய பொதுபல சேன போன்றவர்கள் பௌத்த மதம் இந்து மதத்துடன் ஒன்று பட்டது என கூறுகின்றார்கள். இதை நம்பி தமிழ் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை கண்மூடி பார்த்துக் கொண்டிருப்பார்களேயாயின் நாளை எமக்கும் இதே கதிதான் ஏற்படப் போகின்றது.

ஆகவே இப்படியானவர்களுக்கு பின்னணியில் அரசாங்கத்திலுள்ளவர்கள்  இருக்கின்றார்கள் என்ற நிலை இருந்தாலும் கூட அரச தரப்பு எதிர் தரப்பு என்று பாராமல் அனைத்து இந்து முஸ்லிம் கிறிஸ்தவ சிறுபான்மையின அரசியல் தலைவர்கள் அணிதிரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று மன்னாரிலும் திருகோணமலையிலும் கிடைத்திருக்கும் எலும்பு கூடுகளுக்கு இந்த ஆபத்தான அமைப்பினர் எப்படி பதில் கூற போகின்றார்கள் என பார்ப்போம்' என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Top