நாட்டில் நிலவும் வறட்சி காலநிலை காரணமாக நீர் தட்டுப்பாடு ஏற்படுமாயின் நாடளாவிய ரீதியில் நீர் விநியோகத்தில் கட்டுபாட்டை ஏற்படுத்த வேண்டிவரும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் வறட்சி காலநிலை காரணமாக நீருக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் விநியோகத்தில் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டியுள்ளதென நீர் விநியோக மற்றும் வடிகால்கள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அமைச்சரவைக்கு விடுத்த இவ் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சரவை மேறப்படி அனுமதியை வழங்கியுள்ளது.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்றது. இதன்போது மேலும் சில அமைச்சரவை முடிவுகளை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிக்கையில்,
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாவனை 15 வீதத்தால் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு 7 மில்லியன் பிரயாணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பிரயாணிகளின் எண்ணிக்கையை வருடத்துக்கு 15 மில்லியனாக அதிகரிக்க விமான நிலையத்தை இரண்டாம் கட்டமாக நிர்மாணம் செய்வதற்கு விமான போக்குவரத்து சேவை அமைச்சர் பியங்கர ஜயரத்ன அமைச்சரவைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கிளிநொச்சியிலுள்ள விவசாய மற்றும் பொறியியல் வளாகங்களை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் ரூபா 300 மில்லியனை ஒவ்வொரு வளாகத்திற்கும் ஒதுக்கியுள்ளது. இதற்கமை அபிவிருத்திகளை மேற்கொள்ள உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

Post a Comment