உயர் அழுத்த நோய்க்காக அருந்தும் மாத்திரைகளை அதிகளவில் அருந்தியதால் மோச
மான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பிரதி அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்டிகம நாகவில புத்திபெதும்கம எனும் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். எம். ரணசிங்க காமினி (வயது 52) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த நபர் தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட பிரதி அமைச்சர் விக்டர் அன்டனி பெரேராவின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை இவர் குளியாப்பிட்டியில் இடம்பெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியைப் பார்ப்பதற்காக தனது பிள்ளைகளுடன் சென்றதாகவும், அங்கிருந்து திரும்பி அவர் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும், இந்நிலையிலேயே நேற்று முன்தினம் இவர் உயர் அழுத்த நோய்க்கு எடுக்கும் மாத்திரையினை அதிகளவில் அருந்தி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து சிலாபம் வைத்தியசாலைக்குச் சென்று பார்த்த போது தனது கணவர் உயிரிழந்திருந்ததாக உயிரிழந்தவரின் மனைவியான கங்கா சுவர்ணலதா (வயது 45) என்பவர் நேற்று பகல் சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்ற தனது கணவரின் மரண விசாரணையின் போது சாட்சியமளித்த போது கூறினார்.
தனது கணவர் அழுத்த நோய்க்காக மாத்திரைகள் அருந்தி வந்ததாகவும்,இம் மரணத்திற்கான காரணம் தெரிய வில்லை எனவும் அவரது மனைவி மேலும் தெரிவித்துள்ளார். சிலாபம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment