GuidePedia

0
மகஸின் சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான கோபிதாஸின் பூதவுடல் வடமராட்சி புலோலிப் பகுதியில் அவரது வீட்டிற்கு நேற்றுமுன்தினம் கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த இடமான வடமராட்சியில் இடம்பெறவுள்ளது.
 
தேவரன் வீதி, புலோலி தெற்கைச் சேர்ந்தவரும் லண்டனில் வசித்து வந்தவருமாகிய விஸ்வலிங்கம் கோபிதாஸ் யுத்தம் நடைபெற்றபோது கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையில் வைத்து புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் புலிகளுக்கு நிதி சேகரித்தவர் என்ற குற்றச்சாட்டிலும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்திருந்தனர்.
 
விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோபிதாஸ் நான்காம் மாடியில் விசாரிக்கப்பட்ட பின்னர் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் மகஸின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
 
விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியாகிய இவர் மீது சிறைச்சாலையில் வைத்து சக சிங்களக் கைதிகள் இருமுறை கடுமையாகத் தாக்குதல் நடத்தியதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
 
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மகஸின் சிறைச்சாலையின் 'சி' தள மலசலகூடத்திலிருந்து இவருடைய சடலம் மீட்கப்பட்டிருந்தது. எனினும் இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
 
கோபிதாஸை விடுவிப்பதற்காக தூதரகம் ஊடாக கடந்த ஏழு வருடமாக முயற்சித்து வருகின்ற பொழுதிலும் தனது கணவரை விடுவிக்கமுடியவில்லை எனவும் தற்பொழுது கொலை செய்துள்ளனர் எனவும் கோபிதாஸின் மனைவி தெரிவித்துள்ளார்.
இவரது மரணத்தினையடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பிரிட்டனிலிருந்து வடமராட்சிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் அவரது சடலம் பொறுப்பேற்கப்பட்டு வடமராட்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
 
தற்போது அவரது சொந்த ஊரில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு மக்களும்இ அரசியல்வாதிகளும் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு வடமராட்சி புலோலியிலுள்ள அவரது வீட்டில் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் நேற்று அவருடைய வீட்டிற்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபையின் உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
 
பிரித்தானிய தமிழ் பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் 2007 மார்ச் மாதம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து புலிகளுக்கு நிதி சேகரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின் 8வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இருதய நோயினால் பாதிக்கப்பட்ட இவருக்கு உரிய சிகிச்சை கிடைக்காமையினால் கடந்த 24 ஆம் திகதி மகசின் சிறைச்சாலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இவரது மரணத்தில் பல சந்தேகங்கள் காணப்படுகின்றன. தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக விசாரணை ஏதுவுமின்றி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பல கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருக்கின்றனர். இதனையே கோபிதாஸின் மரணமும் எடுத்துக்காட்டுகிறது. இந்த அரசாங்கம் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கோபிதாஸ் போன்று பல அரசியல் கைதிகள் தொடர்ந்தும் மர்மமான முறையில் மரணமடையா நேரிடும் எனத் தெரிவித்தார்.

Post a Comment

 
Top