GuidePedia

0


மருத்துவப் பரிசோதனைக்காகவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கவும், மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் சென்றார், விஜயகாந்த்.
கால் வீக்கம் ஏற்படுவதால், நீண்ட நேரம் நின்றபடி பிரசாரம் செய்ய முடியாமல், தே.மு.தி.க., தலைவர், விஜய காந்த் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, நீண்ட நேரம் படிக்கும்போது, கண்களில் நீர் கசிவு, மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் லேசான அடைப்பு, தோல் அரிப்பு பிரச்னை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அவருக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கு தொடர்ச்சியாக, பல நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டியது நேரிடும் என்பதால், அதற்கு முன், இந்த பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என, விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். அத்துடன், கூட்டணியை முடிவு செய்வதிலும், விஜயகாந்திற்கு குழப்பங்கள் உள்ளன. கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், உறவினர்கள் என, பலரும் கூட்டணி விஷயத்தில், ஆளுக்கொரு யோசனை தெரிவிப்பதால், என்ன முடிவு எடுப்பது என, தெரியாமல் தவிக்கிறார். லோக்சபா தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய நெருக்கடி, அவருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை அவர், மலேசியா சென்ற போது, அங்கு தி.மு.க., தரப்பில், சிலர் அவரை சந்தித்து பேசினர். அதேபோலவே, இம்முறையும் தி.மு.க., தரப்பில் விஜயகாந்தை, சிங்கப்பூரில் பலரும் சந்தித்து பேசலாம். அப்போது, கூட்டணி தொடர்பாக, 'அத்தனை' விஷயங்களையும் பேசி முடிப்பர் எனவும், இரு கட்சி வட்டாரங்களும் உறுதிபட தெரிவிக்கின்றன. அதனால், மருத்துவப் பரிசோதனை செய்வதற்காகவும், கூட்டணியை இறுதி செய்வதற்காகவும், சென்னையில் இருந்து விமானம் மூலம், நேற்று பகலில், விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

இது தொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது: விஜயகாந்துடன், அவரது மனைவி பிரேமலதா, மருத்துவர் வேணுகோபால், அவரது உதவியாளர் மற்றும் கார் ஓட்டுனர் என, நான்கு பேர் சிங்கப்பூர் சென்று உள்ளனர். இன்று, மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பின், கூட்டணி தொடர்பான முடிவை, அங்கேயே விஜயகாந்த் இறுதி செய்ய இருக்கிறார். அங்கு அவரை யார் யாரெல்லாம் சந்தித்து பேசுவர் என்பதெல்லாம், வெளிப்படையாக சொல்ல முடியாது. இருந்தாலும், கூட்டணி தொடர்பாக முடிவெடுத்து விட்டுத் தான், வரும், 26ம் தேதி சென்னை திரும்புவார். இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Post a Comment

 
Top