ஆதவன்
கொக்கிளாய் முகத்துவாரப் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை மேலும் அபகரித்து இந்திய வீட்டுத் திட்டத்தையும் வழங்கும் நோக்கம் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் தன்னிடம் தெரியப்படுத்தியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கொக்கிளாய் முகத்துவார நிலை பற்றி மேலும் தெரியவருவதாவது,
சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தே சிங்கள மீனவர்கள், கொக்கிளாய் பகுதியின் மீன்பிடி காலத்தின்போது தெற்கில் இருந்து வந்து கடற்றொழிலை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 1983க்கு முன்பு சுமார் 15 குடும்பங்கள் அங்கு இருந்தபோதும், மாதிரிக் கிராமம் என்கிற பெயரில் தமிழரின் காணிகளை அபகரித்து அரசியல் வாதிகளின் துணையுடன் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தன.
இப்போது இன்னும் சில காணிகளை எடுத்து, தற்போது அங்கு இருக்கும் சுமார் 250 இற்கும் மேற்பட்ட சிங்கள மீனவ குடும்பங்களுக்கு, இந்திய வீட்டுத்திட்டத்துடன் கொடுக்கும் முயற்சி திரை மறைவில் நடப்பதாக, குறித்த காணி உரிமையாளர்கள் ரவிகரனிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வழங்கிய தரவுகளின்படி,
சிந்தாத்துரை - 3 ஏக்கர்
செபஸ்தியாம்பிள்ளை - 1 ஏக்கர்
சந்தியாப்பிள்ளை சீமான்பிள்ளை - 2.5 ஏக்கர்
சிங்கராசா - 3 ஏக்கர்
தம்பி ஐயா - 1.5 ஏக்கர்
செபஸ்தியாம்பிள்ளை மரியா மதலெனம் - 1.5 ஏக்கர்
கலித்துப் பிள்ளை யசிந்தா -3 ஏக்கர்
ஆகியோரின் காணிகளே புதிய அபகரிப்பு நோக்கத்தில் அகப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தம்முடைய அறுதி உறுதிக் காணிகள் என மேற்படி காணி உரிமையாளர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கிறார்.
இது விடயமாக , கடந்த 7ஆம் தகதியன்று, கரைத்துறைப்பற்று கிராம, மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசக் கூட்டத்தில் வைத்து, கரைத்துறைப்பற்று பிரதேசச் செயலரிடம் தெரிவித்துள்ளதாக கூறும் ரவிகரன், இவ் அபகரிப்பு குறித்து தான் தொடர்ந்தும் அவதானிப்புடன் இருப்பேன் என்று தெரிவித்தார்.

Post a Comment