முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நெட்டான் கண்டல் கிராமத்தில்
சந்தைக் கட்டடத் தொகுதி ஒன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஷ்வரன் தலைமையில்
இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஷ்வரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட வட மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஷ்வரன்,
நாங்களாக நினைத்து எது சரியோ, எது முறையோ அதை செய்வது தான் ஜனநாயகம், எமது மக்களின் ஆசைகளையும் அபிலாஷைகளையும் நாம் பூர்த்திசெய்ய முன்வர வேண்டும். (…) மக்களை அடக்கியாள முற்பட்டால், அங்கு எதேச்சாதிகாரமே உருவெடுக்கும். இலங்கையில் மத்திய அரசாங்கம் இருக்கும் அதேநேரம், மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்திருக்கின்றது சட்டம். அவ்வாறு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பிரமாணம் எமக்குப் போதுமானதாக இல்லாதிருப்பினும், சட்டம் எமக்குத் தந்துள்ளதைக்கூட பறித்தெடுக்க அல்லது தராது பறிக்க அரசாங்கம் முயன்றுவருவது மனதுக்கு வேதனையாக இருக்கின்றது.என்றார்.அத்துடன்,
நாம் எவ்வளவு பணங்கள் செலவுசெய்து தெருக்கள் அமைத்தோம், ரயில்கள் போட்டோம், கட்டடங்கள் கட்டினோம், பல வேலைத் திட்டங்களில் ஈடுபட்டோம், நீங்கள் எமக்கு வாக்களிக்கவில்லை, ஆகவே உங்கள் மாகாண சபையை நடத்த விடமாட்டோம் என்பது போல் சட்டம் எமக்குத் தந்த உரித்துக்களையும் எமக்குத் தராது முடக்கி வருகின்றது மத்திய அரசாங்கம். இவ்வாறு முடக்குவது ஜனநாயகத்திற்குப் புறம்பான ஒரு செயல். அத்துடன் எமக்குத் தரப்பட்ட கார்ப்பெட் தெருக்களும் கட்டமைப்புகளும் வெளிநாடுகளும் வெளிநாட்டு நிறுவனங்களும் எமக்குத் தந்து உதவிய கொடையே அன்றி, அரசாங்கம் தானாக எதையும் செலவுசெய்யவில்லை என்று நான் நம்புகின்றேன்.எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment