தேசத்துக்கு மகுடம் 2014 கண்காட்சி நிகழ்ச்சிகள் நாளை வெள்ளிக்கிழமை குளியாப்பிட்டியில் ஆரம்பமாகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நாளை மாலை 5.30 மணிக்கு கண்காட்சியை ஆரம்பித்து வைப்பார்.
குளியாப்பிட்டி நகருக்கு சமீபமாகவுள்ள வயம்ப பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்லூரி, மத்திய மகா வித்தியாலயம் என்பவற்றை முக்கோண பிரதேசமாகக் கொண்ட 165 ஏக்கரில் கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கண்காட்சி கூடங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததையடுத்து தேசத்துக்கு மகுடம் 2014 ஞாபகார்த்தமாக முத்திரையொன்றையும் கண்காட்சி திடலில் வெளியிட்டு வைப்பார்.
இம்முறை கண்காட்சிக்கு வரும் மக்களின் நலனை முன்னிட்டு வடமேல் மாகாணத்தில் விசேட பஸ் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பலவும் கண்காட்சி பிரதேசத்தில் செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
நாளை 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை கண்டுகளிப்பதற்கென நாட்டின் பல பிரதேசங்களில் இருந்து பெருந்தொகையான பொதுமக்கள் வருகை தருவரென எதிர்பார்க்கப்படுவதால் குளியாப்பிட்டியில் கண்காட்சி திடலிலும் அதற்கு வெளியிலும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கண்காட்சியை முன்னிட்டு குளியாப்பிட்டி நகரத்தின் பல கிலோ மீற்றர் தூரம் வரையான பகுதிகள் மின் விளக்குகளாலும் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை குளியாப்பிட்டிய நகரில் இருந்து செல்லும் குருநாகல் - நீர்கொழும்பு, சிலாபம் - மாதம்பை, பண்டுவஸ்நுவர ஆகிய வீதிகள் விசாலமாக்கப்பட்டு நவீன முறையில் காபட் இடப்பட்டுள்ளன.
இம் முறை தேசத்திற்கு மகுடம் 2014 திட்டத்தினை முன்னிட்டு குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 2500 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்காட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

Post a Comment