வெளிநாட்டில் தொழில் வாய்ப்புப் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து இருவரிடம் ஏழு இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக புத்தளம் மோசடி விசாரணைகள் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர். 
புத்தளத்தில் இடம்பெற்றுள்ள இக்கொடுக்கல் வாங்கல் சம்பவத்துடன் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் சந்தேக நபர் தன்னிடம் வெளிநாட்டில் தொழில்வாய்ப்புப் பெற்றுத்தருவதாக உறுதியளித்து மூன்றரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக புத்தளம் பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் புத்தளம் பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தின் மோசடி விசாரணைப் பிரிவினரிடம் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறு தன்னிடமும் குறித்த சந்தேக நபர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மூன்றரை இலட்சம் ரூபாய் பணத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக உறுதியளித்துப் பெற்றுக் கொண்டதாக கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய மற்றொருவரும் முறைப்பாடு செய்துள்ளார்.
தம்மிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாதங்கள் கடந்து விட்டபோதும் சந்தேக நபர் உறுதியளித்தபடி இதுவரையிலும் வெளிநாட்டு தொழிலோ அல்லது தாம் வழங்கிய பணமோ தமக்குக் கிடைக்கவில்லை எனவும் அவ்விருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கும் புத்தளம் மோசடி விசாரணைப் பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Post a Comment