(நீர்கொழும்பு நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்)
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 95 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான டின் மீன்கள் உட்பட பல்வேறு உபகரணங்களை நீர்கொழும்பில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித் வீரவர்தன தெரிவித்தார்.
நீர்கொழும்பிலுள்ள அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் குழுவினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டு காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை கைப்பறியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி ரஞ்சித் வீரவர்தன தெரிவிக்கையில், "தொலைபேசி மூலமாக எமக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து சுற்றி வளைப்பை மேற்கொண்டோம். இதன் போது சீனாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான 30 ஆயிரம் டின் மீன்கள், 10 ஆயிரம் கிரீன் பீஸ் டின்கள்; , 5 ஆயிரம் தானிய டின்கள் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான லேசர் இயந்திரம், பிளாஸ்டிக் டின்னர் கலன் உட்பட இயந்திரங்கள் பலவற்றை கைப்பற்றினோம்.
காலாவதியான டின்களில் உள்ள திகதிகளையும் விபரங்களையும் டின்னர் மூலமாக அழி;த்துவிட்டு, லேசர் இயந்திரம் மூலமாக புதிய திகதிகளை பதித்து கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையங்கள் மூலமாக நாடெங்கும் இவற்றை விநியோகித்துள்ளனர்.
இது கடந்த மூன்று வருடகாலமாக இடம்பெற்றுள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் விநியோக நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. ஏனைய தினங்களில் டின்களில் மாற்றங்கள் செய்யும் வேலை இரகசியமான முறையில் நடந்துள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளரும் களஞ்சியசாலை பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார். குறித்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
