GuidePedia

0
தேசிய மீனவ ஒத்துழைப்புப்பேரவையின் அனுசரணையுடன் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பொது மக்கள் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ பிரதிநிதிகள், காணாமல் போனவர்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மீனவர்கள் என சுமார் 110 பேர் நேற்றுசனிக்கிழமை காலை 6 மணியளவில் மன்னாரில் இருந்து இரண்டு தனியார் பேருந்துகளில் யாழ்ப்பாணம் செல்ல விருந்த போது அங்கு வந்த புலனாய்வுத்துரையினர் குறித்த பஸ்ஸின் நடத்துனர், சாரதிகளுக்கு நேரடியாகவும்,தொலைபேசியூடாகவும் அச்சுறுத்தல்களை விடுத்திருந்தனர்.
 
இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம். அழைத்துச் சென்றால் என்ன நடக்கும் என்று தெரியாது என அச்சுறுத்தியுள்ளனர்.
 
எனினும் இவர்கள் தமது பயணத்தை தொடர்ந்த போது மன்னார்- சங்குப்பிட்டி பிரதான வீதி இலுப்பக்கடவையில் உள்ள உணவகத்தில் காலை உணவை உட்கொள்ள இறங்கிய வேளை அவர்களை பின் தொடர்ந்து வந்த புலனாய்வாளர்கள் பஸ் சாரதிக்கு மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்திற்கு மீறிச்சென்றால் பஸ் வண்டி எரிக்கப்படும். நீங்கள் சுடப்படுவீர்கள் என 072-6998507 குறித்த தொலைபேசி இலக்கத்தினுடாக அச்சுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனால் பயணத்தை தொடர பஸ் சாரதிகள் தயக்கம் காட்டியமையினால் பயணம் குறித்த கைவிடப்பட்டது.
 
மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற மக்கள் இந்தியா மற்றும் சீன மீனவர்களின் அத்துமீறிய வருகை, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகளை அபகரித்தல், மீனவர்களுக்கான எண்ணெய் மானியம் வழங்கப்படாமை மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு, வெளிநாடுகளில் கைது செய்யப்படுகின்ற மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் காணாமல் போனவர்களின் நிலைப்பாடுகள் ஆகியவற்றிற்கு நீதி கோரியே குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் நோக்கி மக்கள் சென்றுள்ளனர்.
 
எனினும் நீண்ட நேரம் குறித்த மக்கள் இலுப்பைக்கடவை பாடசாலைக்கு முன் நின்ற நிலையில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், அருட்தந்தை எஸ்.நேரு ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று இலுப்பைக்கடவை பொலிஸ் அதிகாரியை சந்தித்து குறித்த சம்பவம் தொடர்பில் முறையிட்டுள்ளனர்.
தமது பயணம் தடைப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சென்ற மக்கள் மீண்டும் மதியம் ஒரு மணியளவில் மன்னாருக்கு திரும்பினர்.
 
குறித்த மக்கள் தமது பிரச்சினைகளை   வெளிப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் சென்ற போது புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தல்களை வழங்கி அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
 
மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு உரிய முறையில் தீர்வைப் பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் மக்கள் தொடர்ச்சியாக இது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனவும் இதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களோடு நின்று ஆதரவை வழங்கும் எனவும் செல்வம் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
 

Post a Comment

 
Top