அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தில் வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை முச்சக்கர வண்டி ஒன்றில் சென்று பகிடிவதை செய்து அவரைக் கீழே விழுத்தி காயப்படுத்திய 4 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி தெரிய வருவதாவது
கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியொருவர் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் மாலை நேர வகுப்பை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் சாகாமம் பிரதான வீதியால் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது பனங்காடு மயானத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் சென்ற இனம் தெரியாத 4 பேர் கொண்ட இளைஞர்குழு குறித்த மாணவியை பின்தொடர்ந்து பகிடிவதை செய்துள்ளதுடன் அவரின் கையைப்பிடித்து இழுத்துள்ளனர். இதனால் அம்மாணவி தடுமாறி முச்சக்கர வண்டியில் மோதுண்டு வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்குழு அங்கிருந்து தப்பியோட முயற்சித்த போது பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களை கைது செய்த பொலிஸார் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றினர். இதேவேளை படுகாயமடைந்த மாணிவி அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று முதலாம் பிரிவு டீன்ஸ் வீதி ரான்ஸ்போமர் வீதி சின்னமௌலானா வீதிகளை சேர்ந்த 19, 20, 22 வயதுடையவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment