GuidePedia

0
ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் பற்றி எதுவுமே பேச வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டார் அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன்.
இதேவேளை கூட்டமைப்பின் தலைவரின் உத்தரவிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் உடன்பட்டுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் வடக்கு மாகாண சபைக்கும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குழாய்மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் குறித்தும், ஐ.நா. அமர்வில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை வலுப்பெறச் செய்ய சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டுவது தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கும் நோக்குடன் நேற்றைய தினம் யாழ்.பொது நூலகத்தில் விசேட கூட்டமொன்று கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தனர்.
 
நேற்றுக்காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்தக் கூட்டம் பிற்பகல் 4.30 மணிவரை தொடர்ந்தும் இடம் பெற்றது. இந்தக் கூட்டத்தில் இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டு வரும் திட்டம் குறித்து மட்டுமே பேசப்பட்டுள்ளது.
அத்திட்டம் குறித்தும் இறுதி முடிவு நேற்றைய கூட்டத்தில் எட்டப்படவில்லை. 
 
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ளதாலும் இந்தக் கூட்டத்தொடரிலும் அமெரிக்காவினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரேரணையொன்று கொண்டு  வரப்படவுள்ளதாக கூறப்பட்டு வரும் பரபரப்பான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய முடிவுகளை நேற்றைய கூட்டத்தில் எடுக்கவுள்ளது என எதிர்பார்க்கப்பட்டி ருந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர், அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜெனிவா அமர்வு குறித்து எதுவும் பேசக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளார்.
 
அத்தோடு இந்தக் கூட்டத்தில் எந்தவொரு நிகழ்ச்சிநிரலும் கொடுக்கப்படாத நிலையில் நிகழ்ச்சி நிரலின்படி கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜெனிவா அமர்வு குறித்து பேசவேண்டாம் என்றும் கூறியுள்ளார். 
 
இதேவேளை, கூட்டமைப்பின் தலைவரின் இந்த உத்தரவிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் உடன்பாடு தெரிவித்த அதேவேளை, தமது கட்சி உறுப்பினர்களுக்கு ஜெனிவா அமர்வு குறித்து பேச வேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும் தெரியவருகின்றது. 
 
இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இதில் ஐ.நா. அமர்வு குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று கூறிவிட்டு மாகாண சபையுடனும் இரணைமடுக் குளத்து நீருடனும் மட்டுப்படுத்திவிட்டதாக கூட்டமைப்பின்  தலைமை மீது அக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top