மாட்டிறைச்சி வெட்டப்படுவதை
எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளை சாதாரண உடையில்
இருந்தவர்களும் காவல்துறையினரும் சேர்ந்து தாக்கியதாக சிஹல ராவய என்ற
கடும்போக்கு பௌத்தவாத அமைப்பு கூறுகிறது.
பசுக் கொலையை தடுப்பதாக ஜனாதிபதி உறுதியளிக்க
வேண்டும் என்று வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்திய சிஹல ராவய அமைப்பின்
வேவல சீலரத்தன தேரர், தாக்குதலுக்கு உள்ளான பிக்கு ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.'மிகவும் கேவலமான முறையில் பௌத்த பிக்குகள் மீது பொலிசார் தாக்கினர். நாங்கள் கண்டியிலிருந்து பாத யாத்திரையாக வந்தோம். எந்த வகையிலும் நாங்கள் மோதலில் ஈடுபட முற்படவில்லை' என்று பிபிசியிடம் கூறினார் சீலரத்தன தேரர்.
'தேவையற்ற விதத்தில் பொலிசாரும் சிவில் உடையில் இருந்த வேறு நபர்களும் தலையிட்டதால் மோதல் ஏற்பட்டது. எங்களின் பௌத்த பிக்குகள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்' என்றும் கூறினார் சீலரத்தன தேரர்.
பசுக் கொலையை நிறுத்துவது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்பதால் தமது போராட்டத்தை சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும் சிஹல ராவய கூறியுள்ளது.
