அரசாங்கத்தின் மீதுள்ள பழிவாங்கல்களுக்காக தாய் நாட்டையே காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டினையே விக்னேஸ்வரன் செய்கின்றார். சர்வதேசத்திற்கு விலை போகும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வட மாகாண சபைக்கும் முதலமைச்சருக்கும் போதுமான அதிகாரங்கள் வழங்கப்பட்டும் பிரச்சினைக்கு தீர்வுகாண இவர்கள் முயற்சிக்கவில்லை. நாட்டை பிரித்து தனி ஆட்சி நடத்தவே கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் முயற்சிக்கின்றனர் எனவும் அவ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுபலசேனா பௌத்த அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்ட கருத்து முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தின் மீதும், இராணுவத்தின் மீதுமே தனிப்பட்ட கோபம் உள்ளது. அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பினருக்கும் இடையே உள்ள விரோதத்தினால் முழு நாட்டையும் பழிவாங்கிவிடக்கூடாது. இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் சர்வதேசத்தின் கையாளாகவே செயற்படுகின்றனர்.
அரசாங்கத்திற்கும், முழு நாட்டிற்கும் எதிராக சர்வதேசத்தினையே திருப்பி, தேசத்துரோகத்தில் ஈடுபட்டுவரும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்து அவர்களின் செயற்பாட்டினையும் தடை செய்ய வேண்டும்.
மேலும் வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் வட மாகாண சபைக்கும், முதலமைச்சருக்கும் போதுமான அளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. வடக்கின் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடிந்தும் அவர்கள் அவை எவற்றினையும் விரும்பவில்லை என்பதுவே உண்மை. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களையும் தடுத்துஇ அவர்களின் சுய விருப்பங்களுக்காக வடக்கு மக்களை பயன்படுத்துகின்றனர் என்பதே உண்மை. அன்று வடக்கு மக்கள் பொருளாதார ரீதியிலோ கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலோ வாழவில்லை. அவர்களின் மனநிலை நன்றாகவே உள்ளது. எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், விக்னேஸ்வரனும் சேர்ந்து மக்கள் மனதில் பிரிவினை வாதத்தினை தூண்டுகின்றனர். வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடையே ஓர் விதத்திலும், அரசாங்கத்திடம் இன்னோர் விதத்திலும் சர்வதேசத்திடம் வேறொரு விதமாகவும் கருத்துக்களை முன்வைக்கின்றார். ஓர் நாடாக செயற்பட்டு நாட்டை ஒற்றுமைப்படுத்தும் எண்ணம் ஒருபோதும் கூட்டமைப்பினருக்கு கிடையாது.
நாட்டை பிரித்து வடக்கினை தனி அரசாக மாற்றி தனி ஆட்சி நடத்தவே இவர்கள் அனைவரும் முயற்சிக்கின்றனர். ஜெனிவா தீர்மானம் கொண்டு வரவும் கூட்டமைப்பே காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment