இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற அதிகாரத்தைத்தான் இலங்கையிலும் எதிர்பார்க்கிறோம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
சென்னை அடையாறிலுள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் இடம்பெற்ற சிறப்பு சொற்பொழிவு வைபவத்தில் கலந்துகொண்டு 'இலங்கையின் இன்றைய போக்கு" என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்றதும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். இதற்காக 16 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தார். அந்தக் குழு சாத்தியமான தீர்வு திட்டங்களையும் உருவாக்கியது. ஆனால், அதன்பிறகு ஜனாதிபதி இந்த விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை.
வட, கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்ட திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசாங்கம் அந்தச் சட்ட திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தங்கள் வசிப்பிடங்களுக்கு மீள்குடியேற்றம் செல்ல முடியவில்லை. வடக்கு பகுதியில் பாடசாலைகளையும் கோயில்களையும் இடித்தழிக்கின்றனர்.
அரசாங்கத்தின் உத்தரவு இல்லாமலா இதுபோன்ற காரியங்கள் வடக்கில் இடம்பெறுகின்றது.
வளர்ச்சித் திட்டங்களுக்கு என்று சொல்லி தமிழர் பகுதியில் 500 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு இராணுவ குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. தமிழர் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன.
ஒருமித்த நாட்டுக்குள் எந்தவித குந்தகமும் இல்லாமல் விவசாயம், தொழில், வியாபாரத்தோடு நாங்கள் வாழ்ந்தால் போதும். இந்தியாவில் மாநிலங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரத்தைத்தான் இலங்கையிலும் நாம் எதிர்பார்க்கிறோம். நாங்கள் தனி ஈழத்தைக் கேட்கவில்லை. இந்த விடயத்தில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment