(எம்.எம். மின்ஹாஜ்)
எதிர்வரும் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட தமது கட்சியின் கொள்கை பிரகடனத்தை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்க விருப்பதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
இதேவேளை இந்நாட்டிற்கு எதிராக சர்வதேச அழுத்தத்திற்கு அரசாங்கமே மூல காரணமாகும். இதனால் நாட்டு மக்களே பெரும் கஷ்டத்துக்கு உள்ளாகுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நவசமசமாஜக்கட்சியின் தேர்தல் கொள்கை பிரகடன வெளியீட்டு விழாவின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்நாட்டில் மீன்பிடி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் வாழ்வதற்கு வழியின்றி தவிக்கின்றனர். இவ்வரசாங்கம் மக்கள் மீது வரிக்கு மேல் வரி விதிக்கின்றது. நாட்டில் ஊழல் மோசடிகள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.
இவ்வரசின் செயற்பாட்டினை கண்டிப்பதற்கோ அதற்கெதிராக போராடுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை. அத்துடன் தேசிய பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் ஐ.தே.கட்சிக்கோ ஜே.வி.பி.க்கோ தெளிவான கொள்கை கிடையாது. எனவே இவ்வாறான எதிர்க்கட்சியினால் இவ்வாட்சியை கவிழ்க்க முடியாது.
இதேவேளை எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட தேர்தல் கொள்கை பிரகடனத்தை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கவுள்ளோம். அதனூடாக குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி வகைகளை செய்யவுள்ளோம்.
இந்நிலையில் தற்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கமே மூல காரணமாகும். இதன் காரணமாக இறுதியில் இந்நாட்டு மக்களே கஷ்டத்திற்கு உள்ளாகுவர். இந்நாட்டிற்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை குறைக்க வேண்டுமாயின் இவ்வரசை கவிழ்க்க வேண்டும் என்றார்.

Post a Comment