GuidePedia

0
இரத்தினபுரி - ஹிதல்லன பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மாணிக்க கல் வியாபாரி இனம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இன்று இரவு 7 மணியளவில் ஹிதல்லன பிரதேசத்தில் உள்ள குறித்த மாணிக்க கல் வியாபாரியின் வீட்டின் பிரதான வாயிலின் அருகில் வைத்தே அவர் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
 
சுமித் குணசேகர என்ற 40 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான மாணிக்க கல் வியாபாரியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
இரத்தினபுரி நகரிலிருந்து தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் குறித்த மாணிக்க கல் வியாபாரி ஹிதல்லன நகரில் உள்ள தனது வீட்டுக்கு ஜீப் வாகனத்தில் வருகை தந்துள்ளார்.
 
 வீட்டு வளாகத்தின் பிரதான வாயில் அருகில் வந்த அவர் வாயில் கதவை திறப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கி சென்றுள்ளார். இதன் போது கருப்பு நிற கார் ஒன்றில் வருகை தந்துள்ள ஆயுததாரிகள் வியாபாரி மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 
இதன் போது உயிரிழந்த வியாபாரியின் சடலம் இரத்னபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு 3 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
இரத்தினபுரி நகரை அண்மித்த பல பகுதிகளிலும் வீதிச் சோதனை நடவடிக்கைகளை இன்று இரவு அமுல்படுத்திய பொலிஸார் கொலையாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

 
Top