திபெத்தில் சீனர்களின் குடியேற்றத்தைப் போன்றும் பலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றத்தைப் போன்றும் செயற்பட்டு வடக்கு கிழக்கில் சிங்களவர்களைச் குடியேற்றி சிறுபான்மையினரை இல்லாதொழிக்கவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.
ஜக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அவற்றுக்கு வெறுமனே கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்காது அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முற்படுமேயானால் அரசி மீதான அரைவாசி அழுத்தம் குறையும் என்றும் கூறினார்.
இதேவேளை அரசாங்கம் விரும்பியிருந்தால் மீள்குடியேற்றத்தை மேற்கொண்டிருக்க முடியும். இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்றியிருக்க முடியும். நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் நிலையான தீர்வொன்றையும் முன்வைத்திருக்க முடியும். எனினும் அதனைச் செய்யாது இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களை கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என்றும் சுரேஷ் எம்.பி கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
மக்களின் மனம் நோகாமலும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே காணி சுவீகரிப்புகள் இடம்பெறும் என்று காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் இங்கு கூறினார். அவரது கூற்று சிங்களவர்களுக்கு மாத்திரமே பொருத்தமாக இருக்கும்.
வடக்கு ,கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அரச ஆதரவுடன் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டு வருகின்றன. துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்படுகின்றன. அப்படியானால் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் மிருகங்களா எனக் கேட்கின்றேன்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அநீதி இழைக்கப்படுவதாக உலகு எங்கும் பிரசாரம் செய்யப்படுகின்றது.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரப்படுகின்றது. கால அவகாச கால்பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை பறிமுதல் செய்யும் செயற்பாட்டில் அரசு செயல்படுகின்றது. அதுமாத்திரமின்றி காணிகளையும் பறிமுதல் செய்வதோடு தமிழ் மக்களை நாட்டை விட்டே வெளியேற்றுகின்றது.
அரசாங்கத்தினதும் கடற்படையினரதும் திட்டமிடப்பட்ட செயற்பாட்டின் அடிப்படையில் படகுகள் மூலம் தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகின்றனர். தமிழ் மக்களின் விவசாய நிலங்கள், வாழ்வாதாரங்கள் திட்டமிடப்பட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.
இங்கு சீனாவைப்பற்றி புகழ் பாடப்படுகின்றது. ஆனால் இதே சீனாதான் திபத்தியர்களை வெளியேற்றி சீனர்களை குடியேற்றியது. அதே போன்று பலஸ்தீனத்தில் யூதர்கள் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர். அந்த வகையில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்கள மக்களை குடியேற்றி இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பான தனது அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் அவற்றில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கமும் அமைச்சர்களும் பதில்களையே கூறிக்கொண்டிருப்பர்.
இந்த பரிந்துரைகளை நிறைவேற்றினால் பிரச்சினைகளில் அரைவாசிக்காவது தீர்வு கிடைக்கும். சர்வதேச அழுத்தம் இல்லாவிட்டால் எதுவும் இடம்பெறாது என்ற நிலையே காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுமாறு அரசாங்கத்தைக் கேட்கிறோம். அதேபோன்று வடக்கு கிழக்கில் இராணுவத்தை வெளியேற்றி அங்கு ஒரு ஜனநாயக சூழலை ஏற்படுத்துமாறும் கேட்கின்றோம் என்றார்.

Post a Comment