GuidePedia

0
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜெனிவாவில் முன்வைக்க வேண்டும் என்பதே எமது மக்களின் தற்போதைய நிலையாகும் என நோர்வேத் தூதுவரிடம் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
 
வடக்கிற்கு விஜயம் செய்திருந்த நோர்வேத் தூதுவர் திருமதி கிறீட் லோடர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை யாழ்.ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
 
இச்சந்திப்பின் பின்னர் யாழ்.ஆயர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
வடக்கிற்கு விஜயம் செய்திருந்த நோர்வேத் தூதுவர் கிறீட் லோடன் உள்ளிட்ட குழுவினர் என்னைச் சந்தித்து வடபகுதி மக்களின் தற்போதைய நிலை தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது வடக்கிலுள்ள பிரதேச சபைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைவதற்கான காரணங்கள் என்ன என அவர்கள் என்னிடம் வினாவியிருந்தார்கள். அதற்கு நான் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படுகின்ற புரிந்துணர்வற்ற தன்மை மற்றும் முரண்பாடுகள் காரணமாகவே இப்பிரச்சினை ஏற்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தேன். இதேபோல் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் வட மாகாண சபையில் முன்வைக்கப்படுகின்ற தீர்மானங்கள் ஆத்தரமூட்டுவனவாக அமைவதாகச் சுட்டிக்காட்டி அதைவிடுத்து பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய தீர்மானங்களை முன்வைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். இதனூடாக மற்றத்தரப்பினரை ஆத்திரமூட்டாத வகையில் கவர்ந்து பிரதேசத்தின் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என்ற கருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.
 
இதேவேளை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என நீங்கள் ஏன் கோருகின்றீர்கள் எனவும் அதனால் என்ன பயன் எனவும் நோர்வேத் தூதுவர் என்னிடம் வினவியிருந்தார்.
 
காணாமற்போனோர் தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில் இன்னமும் கிடைக்கவில்லை. இத்தகைய விசாரணைகள் ஊடாக இங்கு நடைபெற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, இழப்பீடு, ஆறுதல்கள், நியாயம், மனத்திருப்தி ஏற்படும் என சுட்டிக்காட்டியிருந்தோம்.
 
போருக்குப் பின்னர் வடமாகாணத்தில் குற்றச் செயல்களான போதைப் பொருள் பாவனை, சமூக விரோதச் செயல்கள், பாலியல் பலாத்காரங்கள் போன்ற கொடூர சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது எனச்சுட்டிக்காட்டி இச்சம்பவங்களுக்கு என்ன காரணங்கள் எனவும் அவர்கள் என்னிடம் வினாவியிருந்தார்கள்.
 
இதுவே போரின் வடு என மூத்தவர்களும் நாமும் படித்தவர்களும் கவலையை வெளியிட்டு வருவதை அவரிடம் சுட்டிக்காட்டினோம்.
 
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை ஒன்று தேவை என்பதையே இங்குள்ள மக்களும் புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், நாமும் வலியுறுத்துகின்றோம் என்ற விடயத்தையும் தெளிவாக குறித்த தூதுவரிடம் விளக்கியுள்ளோம் என்றார்.
 
இதேவேளை நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் திருமதி கிறீட் லோடன் தலைமையிலான குழுவினர் வடபகுதிக்கான இருநாள் விஜயமாக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தனர்.
 
இவர்கள் இவ்விஜயத்தின்போது நேற்றுக் காலை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்து வடக்கின் நிலைமை தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன், வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோருடனும் கலந்துரையாடியுள்ளார். யாழ்.ஆயரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இன்று காலை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்துக் கலந்துரையடிய பின்னர் வன்னிக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top