ஒரே நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளித்திருந்த பெரும் எண்ணிக்கையானோர் நேற்று மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டமையே இதற்குக் காரணமாகும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காலை 7 மணிக்கே பெரும் எண்ணிக்கையானோர் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளித்திருந்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் நேற்று நள்ளிரவு வரை தமக்கான தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஆட்பதிவுத் திணைக்களத்தில் காத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் சரத் குமாரவிடம் தொடர்புகொண்டு வினவியபோது, சமூகமளித்திருந்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டைகளை ஒரே நாளில் வழங்குவதில் நிலவிய சிக்கல்நிலையை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக கையால் எழுத்துவதற்குப் பதிலாக விபரங்கள் அச்சிடப்பட்டு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
ஆயினும், ஒரே நாள் சேவையின் ஊடாக சிறந்த சேவையை முன்னெடுப்பதற்குரிய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment